பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கம்பன் - புதிய பார்வை கொண்டு களிக்கும் மனத்தள் ஆயினாள். எனவே அனுமனை அல்லாமல் அவனை ஒத்த வலி படைத்தவர் வேறு யாரேனும் இலங்கையில் அவன் இடத்தில் வந்திருந்தாலும், அவன் செய்த, செய்யப் போகும், வீரச்செயல்களைச் செய்திருந்தாலும், அவர்களால் பிராட்டியின் துயரைப் போக்கி இருக்க முடியாது. என்ன கைம்மாறு? இத்தகைய பேருபகாரம் செய்த அனுமனுக்குப் பிராட்டி கைம்மாறு செய்ய விரும்புகிறாள். ஒருவருக்கு ஒர் உபகாரம் அல்லது கைம்மாறு செய்ய வேண்டும் எனின், என்ன செய்ய வேண்டும் அவர்களிடம் முன்னமே இல்லாததும், அவர்கட்குப் பயன்படக் கூடியதும் ஆன ஒன்றைத் தருதலே சிறப்புடைமை ஆகும். அப்படியானால் அனுமனுக்கு என்ன செய்ய முடியும்? அவன் கலைகளின் உறைவிடம்; எல்லையற்ற ஆற்றல் படைத்தவன்; தவ பலம் உடையவன்; இவை எல்லா வற்றையும்விட, புலனடக்கம் காரணமாக எதுவும் வேண்டும் என்று விரும்பாதவன். எதிலும் பற்றில் லாதவனை யார்தான் என்ன செய்ய முடியும்? வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை யாண்டும் அஃது ஒப்பது இல். (திருக்குறள்-363) எதுவும் வேண்டா என்று நினைப்பதே மிக மிக உயர்ந்த செல்வமாகும். வேறு எங்கும் அதை ஒத்த செல்வம் வேறு இல்லை என்பது அறநூல். வேண்டாமை என்ற அத்தகைய விழுமிய செல்வத்தை நிரம்பப் பெற்றுள்ள அனுமனுக்கு யார்தான் எதைத் தர முடியும்? எனவே, பிராட்டி பலபடியாக அவனைப் பாராட்டு கிறாள். -