பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 291 மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய் செம்மையால் உயிர்தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே? அம்மையாய், அப்பன் ஆய, அத்தனே - அருளின் வாழ்வே! இம்மையே மறுமைதானும் நல்கினை இசையோடு என்றாள். (உருக்காட்டுப் படலம்-70) தன்னைப் பெற்ற தாயும் தகப்பனும் அனுமனே, என்று போற்றுகிறாள். இவ்வாறு அப்பிராட்டி கூறும்பொழுது, ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியே கூறுகின்றாள். அவளைப் பெற்ற சனகனும், அவன் மனைவியும் இம்மையில் அவள் வாழ வழிவகுத்தனர் என்பது உண்மையே. ஆனால், அந்த இம்மை வாழ்வு அழியப் போகின்ற இந்த நேரத்தில் சனகன் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தப் பழியுடன் தான் இறந்தால், மறுமையும் தனக்கு இல்லாமல் போகும் என்று நினைக்கிறாள். அப்படியானால் இவள்மாட்டுக் கொண்ட அருளின் காரணமாகத் தற்கொலை முயற்சியிலிருந்து இவளைத் தடுத்து, இம்மை வாழ்வு அளித்தான். இராகவன் வந்து போர் தொடுத்து இராவணனை அழித்து அவளுக்குப் பழி உண்டாகாமல் தடுக்க அதன்மூலம் மறுமையையும் தருகிறான். பெற்றெடுத்த தந்தையும், தாயும் ஒன்றுஞ் செய்ய முடியாத பொழுது, உயிர், இம்மை மறுமை என்ற மூன்றையும் அனுமன் தந்தான். ஆகலின் சனகன் மகளாக இதுவரை இருந்த பிராட்டி, இனி அனுமன் மகளாக ஆகிவிடுகிறாள். எனவே, தந்தையின் இடத்தில் இருக்கும் அனுமனுக்கு அவள் என்ன செய்ய முடியும்? அவனோ எல்லாச் செல்வங்கட்கும் மேம்பட்ட வேண்டாமை என்ற விழுச் செல்வத்தைப் பெற்றுள்ளான். இந்நிலையில், புதுமுறையில் பிராட்டி வாழ்த்துகிறாள்.