பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 + கம்பன் - புதிய பார்வை 'மதி உடம்படுதல்' என்ற சொல் அகத்திணையில் பயிலப்படும் ஒரு சொல்லாகும். அதாவது, தலைவி அல்லது தலைவனுடைய மதியைத் தன் மதியுடன் ஒன்றாக இணைத்து அவர் கருத்தை அறிதல் என்று பொருள்படும். நச்சினார்கினியரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட இப் பாடலில் 'மதியுடம் பட்ட மடக்கண் சீதை' என்று மட்டுமே வருகிறது. மடக்கண் சீதை என்று சீதையின் கண்ணுக்குச் சிறப்புத் தந்து கவிஞன் அதனை அடையாகக் கூறினானாயினும். அவள் இராமன் மனக்கருத்தை (மதியுடம் படுதற்கு) அறிதற்குத் தன் கண்ணையே பயன்படுத்தினாள் என்ற கருத்தை நுண்மையாக விளங்க வைக்கின்றான். இந்த நுண்ணிய கருத்தை விளங்கிக் கொண்ட கம்பன் அதனை விரித்துக் கூறுமுகமாக ஒர் அற்புதமான நிகழ்ச்சியைப் படைத்துக் காட்டிவிடுகிறான். இராமன் வில்லை முறித்துவிட்டான் என்ற செய்தியை நீலமாலை என்ற தோழி வந்து சீதையிடம் கூறுகிறாள். ஆனால் முறித்தவன் யார் என்பதை அறியுமுன்னர் சீதை பெருங் கவலைக்கு உள்ளானாள். காரணம், தான் காதல் கொண்டவன் யார் என்பதை அறிந்துகொள்ளப் பிராட் டிக்கு வாய்ப்பு இல்லை. நீலமாலை கூறின செய்தியிலிருந்து தான் காதல் கொண்டவனும், வில்லை ஒடித்தவனும் ஒருவனே என்பதைப் பல்வேறு சுற்றுப்புறச் செய்திகளால் அறிய முடிகிறது. அறிந்தவுடன் பெருமகிழ்ச்சி கொண்டாள். இதுவே கம்பன் வரையும் ஒவியம். நீலமாலை சீதையிடம் வந்து தசரதன் மைந்தன், இராமன் என்பது பெயர் என்பதோடு நிறுத்தாமல் இளைய கோவொடும், பராவரு முனியொடும் பதிவந்து எய்தினான் (கார்முக-59 என்று கூறி, அவன் தோளின் வாங்கினான் அவை நடுக்குற முறிந்து வீழ்ந்தது, (கார்முக-6) என்றும் கூறினாள்.