பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 + கம்பன் - புதிய பார்வை அறிவர். எனவே சிற்சிலவற்றிற்கு அடையாளமாக (Symbols) சில உறுப்புக்களைக் கூறுதல் மரபுதான். கூந்தல் ஞானத்துக்குக் குறியீடு. அதே போல அவன் திருவடி, திருவருளுக்குக் குறியீடு. அவனுடைய திருவருளைப் பெறுதலைத்தான் திருவடி அடைதல் என்று மரபாகக் கூறுகிறோம். திருவையாற்றுப் பதிகம் 20 பாடல்களிலும் இறைவனின் திருவடிப் பெருமையைப் பேசுகிறார் திருநாவுக்கரசர். அதில் ஒரு பாடல் பொருளைத்தான், கம்பன் பாடலும் தெரிவிக்க எழுந்ததோ என்ற ஐயத்தைத் தோற்றுவித்தது. ஒதிய ஞானமும், ஞானப் பொருளும், ஒளி சிறந்த வேதியர் வேதமும், கேள்வியுமாவன; விண்ணும் மண்ணும் சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன; தூமதியோடு ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே. - (திருமுறை-4-92-17) (ஐயாறன் திருவடி ஒதிய ஞானமும், ஞானப் பொருளும், அந்தணர் வேதமும், கேள்வியுமாவன: விண்ணும், மண்ணும், ஒளியும், ஞாயிறும், தூமதியும் ஒப்பன ஒளியில், ஆதியும் அந்தமும் உயிர்கட்கு அவையே ஆம்.) திருவடிக்கு ஒளி உண்டு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். இதனை ஒரளவு மாற்றி, திருவடிபோல ஒளிவிடும் ஒன்றைக் காட்டினாள் பிராட்டி; மாருதி அதனைக் கண்டான் என்று கூறும்பொழுது, குருவாக நின்று ஒளியைக் காட்டலும், அதனைச் சீடன் காண்டலும் நினைவுக்கு வருகின்றது. அனைத்துத் தகுதிகளும் நிறைந்தவன் அனுமன் என்பதைப் பரம்பொருளே, அவனைப் பார்த்த மாத்திரத்தில் கூறிவிட்டான்.