பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 307 அடைந்தனர், என்பன போன்ற தகவல்கள், கேள்வி ஞானத்தால் மட்டுமே வருபவை. ஆனாலும் இவற்றைச் சொல்கிறவர்களுடைய மனநிலை, விருப்பு, வெறுப்பு என்பவற்றையும் ஆராய்ந்து காண்டல் வேண்டும். இவற்றை எல்லாம் மனத்துட் கொண்டுதான் இராகவன் செறிந்ததும், அதிகமானதுமான கேள்வி ஞானம் உடையாய்! என்று விளிக்கிறான். இப்பொழுது அனுமன் நிலை தருமசங்கடமாக உள்ளது. இவனுக்கு முன்னர்ப் பேசிய அனைவரும் இவனுக்கு மூத்தவர். அதிகார முறையில் சுக்ரீவன் இவன் தலைவன். சாம்பன் அமைச்சருள் மூத்தவன். நீலன் தானைத் தலைவன். சுக்ரீவனுடைய அதிகார முறைவைப்பில் (Protocal) அனுமனின் இடம் நிர்ண யிக்கப்படாத ஒன்றாகும். அதிகார முறைவைப்பில் அனுமனுக்கு இடம் இல்லை. அமைச்சர் குழுவிலும் அவன் தனி இடம் பெற்றதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், அவன் தன் கருத்தைக் கூற வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது. சக்கரவர்த்தித் திருமகனுக்கு இந்த அதிகார முறைவைப்புப் பற்றி நன்கு தெரியும். ஆதலால்தான் அவனும் அனுமனை வாய்விட்டு, 'நீ என்ன கூறுகிறாய்? என்று கேட்பதுடன், குறிப்பினாலும் கேட்கிறான். 'நோக்கினான்’ என்ற சொல்லுக்குப் பொருளோடு பார்த்தான் என்பதே பொருள். முகமே அகத்தை அறிவிக்கும் இத்தனை இடையூறுகட்கு இடையே, மாருதி விடை கூற முற்படுகிறான். அதிகாரப் படியில் எங்கோ கீழே இருக்கிறான் அவன். ஆனால் அறிவு, கல்வி, கேள்விகளில் இராமனுக்கு அடுத்தபடியாக உள்ளான் என்றாலும், அடக்கம் என்னும் அருங்குணத்தின் உறைவிடமாக இருத்தலின், அவன் விடையும் அதற்கேற்பவே உள்ளது.