பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 கம்பன் - புதிய பார்வை மாருதி அமுத வார்த்தை செவிமடுத்து இனிதுமாந்தி, பேர் அறிவாள நன்று! நன்று! என.................. (வீடணன் அடைக்கலப் படலம்-103) மாருதியின் சொற்கள் இராமனுக்கு அமுதமாக இருந் தனவாம். ஏன்? நண்பர்கள் அனைவரும் ஒருமுகமாக வீடணனை ஏற்பது தகாது என்று கூறிவிட்ட நிலையில், இராமன் என்ன செய்ய முடியும்? அவர்களை மீறி, நீங்கள் கூறுவது தவறு, அடைக்கலம் வந்தவனை ஏற்றே தீருவேன் என்று கூறி இருக்கலாம். அப்படி ஏன் செய்யவில்லை. அவ்வாறு செய்தால் தனக்குத் துணையாக வந்தவர்களின் மனத்தை முறிப்பதாக முடியும். வெளியில் கூறாவிட் டாலும் நாங்கள் கூறும் உரையைக் கேட்பதில்லை என்பது முடிவானால், இவர் ஏன் எங்களைக் கேட்க வேண்டும்? என்ற சிந்தனை எழலாம் அல்லவா! இவ்வளவு தூரம் தனக்காகப் படை திரட்டி வந்தவர்களை, எளிதாக இராமன் மனம் முறியச் செய்யமாட்டான். இவர்கள் மனம் முறியச் செய்யவும் கூடாது. அதே நேரத்தில், இவர்கள் கூறுவதை மீறியும் ஆக வேண்டும். இந்த இக்கட்டான நிலையில்தான், மாருதியிடம் குறிப்பாகக் கேட்டான். அந்தக் குறிப்பின் பொருளை உணர்ந்து, அதுவும் தன் கருத்துடன் ஒத்துப்போவதால், மாருதி விரிவாகக் காரண காரியங்களுடன் பேசினான். தன்னுடைய தரும சங்கடமான நிலையிலிருந்து விடுபடும் வாய்ப்பை அனுமன் சொற்கள் நல்கின. எனவே தான் அது அமுதவார்த்தை ஆயிற்று. அமுது போகும் உயிரை நிறுத்தும். இவன் சொற்கள் இராமன் மனத்துள் விளைந்த சங்கடத்தைப் போக்க உதவின. அமுதை மகிழ்ச்சியுடன் மாந்துவதுபோல, இவனும் அனுமன் சொற்களை மாந்தினான்; தன் மகிழ்ச்சியை விளக்கும் விதத்தில் பேர் அறிவாள! என்று விளித்தான். இவ்வாறு விளிப்பதிலும்