பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 + கம்பன் - புதிய பார்வை எதிரே அனுமனைப் புகழ்தல் சரியன்று. எனவேதான், அனுமனைப் பற்றிக் குறிப்பிடாமல், 'இயம்பினர் என்று பொதுவாகக் கூறிவிட்டான் இராகவன். இராகவனது அரசியல் அறிவுக்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டாகும். வளரும் வலிமை இதுவரை அனுமனுடைய கல்வித் தகுதி, நுண்மாண் நுழைபுலம், அடக்கம் உடைமை, புலனடக்கம், பணிவு உடமை, இராமனிடத்தில் முழுச் சரணாகதி என்பவை பற்றிப் பேசப்பட்டது. இனி இத்துணை அடக்கம் உடைய வனாயினும், வீரத்திற்கும் அவன் உறைவிடமாகிறான் என்பதற்கு ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் காணலாம். அனுமன் வலிமை இராவணன் வலிமை போல உள்ளதன்று. வாய்மை இன்மை, புலனடக்கம் இன்மை, கழி காமம் என்பனவற்றால் இராவணன் வன்மை, உள் அரிக்கப்பட்டதாக ஆகிவிட்டது. ஆனால், அனுமனின் வன்மை, அவனுடைய பண்பு நலன் காரணமாக, நாளும் வளர்கின்ற ஒன்றாக இருந்தது. அனுமன் வலிமை அறத்தின் அடிப்படையில் எழுந்தது என்ற உண்மையைச் சாம்பன் இதோ கூறுகிறான். மயேந்திர மலையில் நின்று, யார் கடலைக் கடந்து செல்லும் ஆற்றல் பெற்றவர் என்ற பிரச்சினை பற்றி ஆராயப்பட்ட பொழுது சாம்பன் அனுமனை நோக்கி, நீரே இக் கடல் தாவும் வேகம் அமைத்திர் (மயேந்திரப் படலம்-19) என்று கூறுகிறான். திடீரென்று சாம்பன் இம்முடிவுக்கு வரவில்லை. 10 பாடல்களில் அனுமனுடைய ஆற்றலை விரிவாகப் பேசுகிறான். வெப்புறு செந்தீ, நீர், வளியாலும் விளியாதீர்; செப்புறு தெய்வப் பல்படையாலும் சிதையாதீர்; (பஞ்ச பூதங்களாலும், தெய்வப் படைக்கலங்களாலும் அழியமாட்டீர்.)