பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கம்பன் - புதிய பார்வை அறிந்திருந்தான். தன் பகைவனும், தம்பியுமாகிய சுக்ரீவனை, எவ்வளவு துல்லியமாக எடை போட் டிருந்தானோ, அதேபோல அனுமனையும் எடை போட்டிருந்தான் என்பதை, அவன் இறக்கு முன் இராமனிடம் பேசிய பேச்சுக்களிலிருந்து அறியலாம். இறக்கப் போகும் வாலி தன்னைக் கொன்றவனாய இராமன் யார் என்பதை அறிந்த பிறகு, 'ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்; பூ இயல் நறவம் மாந்தி, புந்திவேறு உற்ற போழ்தில், தீவினை இயற்று மேனும், எம்பிமேல் சீறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றனை ஏவல் என்றான். (வாலி வதைப் படலம்-134) (ஓவியம் போன்ற வடிவுடையாய்! நான் உன்னிடம் வேண்டுவது ஒன்று உண்டு. என் தம்பி குடித்துவிட்டுப் புத்தி தடுமாறித் தீவினை செய்தாலும், நீ கோபித்து என்மேல் ஏவிய அம்பை அவன் மேல் ஏவிவிடாதே) வாலியின் பரிந்துரை வாலி, இப்பொழுது பண்பாட்டின் உச்சியில் நின்று பேசுகிறான் என்பதற்கு, இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. எந்தத் தம்பி தன் உயிருக்கு உலை வைத்தானோ அந்தத் தம்பியின் பண்பாட்டை நன்கு அறிந்த வாலி, இப்பொழுது அவனைக் காக்கப் பாடுபடுகிறான். சுக்ரீவன் பற்றிய வாலியின் கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பதைக் கார்காலப் படலத்தில் காண முடிகிறது. இந்த நேரத்தில் இராமனும், வாலியைப் பற்றிய தன் பழைய கணிப்பை மாற்றிக்