பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கம்பன் - புதிய பார்வை கண்டு பிடித்ததிலிருந்து, பிரமாத்திரம் முதலியவற்றால் ஊறு விளையாமல் காத்ததிலிருந்து. கடைசியாகப் பரதன் தீப்புகாமல் காத்ததிலிருந்து அவதார நோக்கம் நிறைவேற அனுமன்தான் உதவினான். இராமனை அனுமனிட மிருந்தும் பிரிக்க முடியாது. தலைவனாகிய இராகவ னுடைய நண்பர்கள் இவனுக்கும் நண்பர்கள். அவன் பகைவர்கள் இவனுக்கும் பகைவர்களே. இஃதல்லாமல் இவனுக்கு என்று பகை, நட்பு நொதுமல் என்று எவரும் இலர். இராமன் மனத்தில் என்ன நினைக்கிறானோ அந்த நினைவு அப்படியே அனுமன் மனத்திலும் தோன்றும். எனவே, அதனை நிறைவேற்றுவதே அவன் வாழ்க்கையின் குறிக்கோள். இராமன் பணி இடாத நேரத்தில், அவனுடைய தற்போதம் முழுவதும், இராமபக்தியிலும் அவன் நினைவிலுமே கழிகிறது. காளத்தி வேடனாகிய கண்ணப்பரைப் பற்றிச் சேக்கிழார் கூறிய, தன் பரிசும், வினை இரண்டும், சாரும்மலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவர் (கண்ணப்பர் புராணம்-154) என்ற சொற்கள் அனுமனுக்கும் முற்றிலும் பொருந்தும், கண்ணப்பர், அனுமன் போன்றவர்களுடைய கருவி, கரணங்களைப் பசுகரணங்களாக இருந்தவை மாறிப் பதிகரணமானவர்கள் என்று கூறுவர். (அந்தக் கரணங் களாவன-மனம் சித்தம், புத்தி, அகங்காரம் என்பவை) இவ்வளவு ஆற்றலும், அவனுடைய அடக்கத்துள் அடங்கி இருந்தமையின், வெளியில் தெரிய வாய்ப்பே இல்லாமல் இருந்தது. ஆர்ப்பாட்டம் இல்லாமையின், இவன் வீரத்தைக் குறைவாக எடைபோட்டு உயிரிழந் தவர்கள், அக்ககுமாரன் முதல் பலராவர்.