பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 + கம்பன் - புதிய பார்வை குதிரை, யானை, தேர், வண்டி என்ற அரசர்க்கு உரியவற்றைத் தோலில் தைக்கப்பட்ட செருப்புக்கு ஈந்தவனாகிய பரதன் திருவடிகளில் வீழ்ந்தான்.) பரதனுடைய புலனடக்கமும், வேண்டாமையும், அரசச் செல்வத்தை வைத்துக்கொண்டே அதில் ஈடுபடாமல் துறவு வாழ்க்கை வாழ்ந்த மாபெரும் துறவாகும். ஒன்றும் அகப்படாத காட்டில் மேற்கொள்ளும் துறவு வேறு; எல்லாம் கிடைக்கும் நாட்டில் அரசனாக இருப்பவன் துறவு மேற்கொள்வது மாபெருந் துறவே அன்றோ? எனவே, அரியணை தாங்கியவனும், வெண் கொற்றக் குடை பிடித்தவனும், புலனடக்கம், துறவு, பரநலம், தொண்டு, என்பவற்றின் மொத்த வடிவமாவார்கள். இதில் நடுவில் இராகவன் முடிகவிக்கப் பெறுகிறான். அடியும், முடியும் புலன் அடக்கத்தின் அடையாளமாக உள்ள இருவர் உளர் என்றால் நடுவே உள்ள பர்ம்பொருள் எத்தகையதாக இருக்கும் என்று கூறத் தேவை இல்லையல்லவா ? காப்பியத்தின் தொடக்கத்தை மறுபடியும் நினைவுகூற வேண்டும். ஐந்து பொறிகளாகிய அம்புகளும், மகளிர் கண் என்னும் போர் புரிகின்ற அம்பும் தமக்கு என வகுக்கப் பெற்ற செந்நெறியிலிருந்து புறத்தே செல்லாத மக்கள் வாழும் கோசல நாட்டைக் கூறத் தொடங்குகிறது காப்பியம். எனவே, புலனடக்கம் உடையவர்கள் வாழும் நாட்டை வருணிக்கத் தொடங்கும் காப்பியம், அதனை முடிக்கும் பொழுது, அந்த நாட்டை ஆளும் அரசனைப் பற்றிக் கூறுகிறது. மக்கள் புலனடக்கத்தில் தொடங்கி மன்னன் புலனடக்கத்தில் முடிகிறது காப்பியம். அரசன் மட்டுமா? இல்லை; அவன் அமர்ந்துள்ள சிம்மாசனம்; அவன் மேல் நிழற்றும் வெண்கொற்றக் குடையுங்கூடப் புலனடக்கத்தின் அடையாளமாகவே உள்ளன என்று முடிக்கிறான்.