பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 கம்பன் - புதிய பார்வை பொறுமையோடு இருக்க முடியும்? எனவே அவன் தெய்வமாகிய இராமனுக்குத் தீமை நினைந்து செய்யத் துணிந்தவர்களை அழிக்க முற்பட்டால், அதில் யார் தவறு காண முடியும்? அவன் பகை என்று கருதுபவர்கள் துரதிர்ஷ்டவசமாக இராமனுக்குத் தாயும் தந்தையுமாக இருந்துவிட்டனர். அது ஒரு தற்செயல் (accident). இதற்காக இளையவன் என்ன செய்ய முடியும்? அவன் விழுப் பொருள் என்று கருதும் இராமனுக்கு வரும் தீமையைத் தடுக்க முற்படுகிறான். ஆதலால் அவனுடைய கோபம் தவறானது என்று கூற முடியாத நிலை. இதனை இராமனும் புரிந்துகொள்கிறான். அவன் எப்பொழுது புரிந்துகொண்டான்? பெற்றாயும் நீயே! பிறர் இல்லை' என்று இலக்குவன் அடித்துப் பேசியபொழுதுதான், இராமன், இலக்குவனையும் அவனுடைய விழுப்பொருள் யாது என்பதையும், புரிந்துகொண்டான். தம்பியை அடக்க தமையன் கண்ட வழி புரிந்துகொண்ட இராமன் மற்றொன்றையும் தெரிந்து கொண்டான். தான் கூறிய வாதங்களில் இலக்குவன் கட்டுப்பட மாட்டான் என்பதனையும், இவனை இப்படியே விட்டால் விளைவது தீமையே என்பதையும் நன்கு தெரிந்துகொண்டான். அப்படியானால் அடுத்துச் செய்யவேண்டியது யாது? இலக்குவன் எதனைத் தனது விழுப்பொருள் என்று கருதுகிறானோ, அதன் வழியிலே சென்றுதான், அவனை மடக்க வேண்டும் என்ற உண்மை இராமனுக்கு நன்கு புலனாயிற்று. தனக்கு விழுப்பொரு ளாக உள்ள தாய், தந்தை, சோதரன் என்பவர்களைக் காக்க வேண்டுமானால் இலக்குவனை அடக்க வேண்டும். அவனை அடக்க வேண்டுமானால், அவனுடைய விழுப்பொருளுக்கு ஊறு நேராமல் அதன் வழியே சென்று அதனை முடிக்க வேண்டும். இந்த வழி தெரிந்தவுடன்