பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 - கம்பன் - புதிய பார்வை ஒருவன் மாற வேண்டுமாயின், அவன் வளர்ச்சி அடைகிறான் என்பதையே அது குறிக்கும். அற்ப சொற்ப ஊதியங்கள் பெறவோ, அல்லது வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்காகவோ, பட்டம் பதவி கட்காகவோ, விழுப்பொருளை விட்டுக் கொடுப்பவன் சாதாரண மனிதன். இன்னும் கூறவேண்டும் எனின், சாதாரண மனிதனினும் ஒருபடி தாழ்ந்தவனே. இரண்டாவது சூழ்நிலை எதிரே நடைபெறும் நிகழ்ச்சியைப் பொறுத்ததாகும். அற்பமான ஒன்றுக்காக, விழுப்பொருளை மாற்றிக் கொள்வது கீழ்மகன் வேலை என்று கண்டோம். இதன் எதிராக மிக உயர்ந்த ஒன்றிற் காக, வேறு பயன் ஒன்றையும் கருதாமல் விழுப்பொருளை மாற்றிக்கொள்வதும் உண்டு. இது மிக அருகி நடைபெறும் ஒன்றாகும். அதற்கும் கம்பனில் இடம் உண்டு. வாலியின் மாற்றம் ஆதி காவியமாகிய வான்மீகத்திலும், வங்காள இராமாயணம் போன்றவற்றிலும், வாலி என்ற பாத்திரம் சாதாரணக் குரங்காகவே படைக்கப்பட்டுள்ளது. உலக இலக்கியம் எதிலும் காணப்படாத முறையில், கம்பநாடன் வாலியையும், அனுமனையும் படைத்துள்ளான். வாலியின் தவ வலி, கல்வி முதலியவற்றிற்கு ஈடு இணையே இல்லை என்னும்படி படைக்கப்பட்டுள்ளான். கதை அனை வருக்கும் தெரியுமாதலின் இங்கு வளர்த்த வேண்டிய தேவை இல்லை. வாலி இராமன் அம்பால் அடிபட்டு வீழ்ந்து கிடக்கின்றான். தன் மார்பையும், ஒருவனுடைய அம்பு துளைக்க முடியும் என்று, அவன் கனவிலும் கருதினவன் அல்லன். எனவே மார்பைத் துளைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட இராமன் அம்பைத் தன் வாலாலும், காலாலும், பற்றி அது மேலே போகாமல்