பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 கம்பன் - புதிய பார்வை 'கார்முகில் கமலம் பூத்து மண் உற்று வரிவில் ஏந்தி வருகின்றது போன்ற திரு மாலைக் கண்ணுற்று. நோக்கி. ஏசுவான் இயம்பலுற்றான்' என்று இயைத்துக் காண்டல் வேண்டும். மாபெரும் தவறு செய்துவிட்டான் இராமன் என்று நினைத்துச் சூரிய குலமே இவனால் பழிபட்டுவிட்டது என்று வருந்தும் வாலி, இராமனைக் கண்டான் என்று கூற வந்த கவிஞன், கார். போலும் என்று கூறுவது பொருந்துமா? சாதாரண நிலையில் இது பொருந்தாதுதான். கவிஞன் கூறுகின்ற இந்தக் காட்சி, வாலியின் கண்ணில் பட்டிருந்தால் ஏசுவானா? ஏச மனம் வருமா? உறுதியாக வராது! அப்படியானால், கவிஞன் தேவையில்லாமல் முன் இரண்டு அடிகளில் பரம் பொருளைப் பற்றிய விளக்கம் தரக் காரணம் என்ன? பாடுபவன் கவிச் சக்கரவர்த்தி! எனவே, நின்று நிதானித்துக் காண்டல் வேண்டும். நாம் நின்று நிதானித்துப் பொருள் காண வேண்டும் என்பதற்காகவே கவிஞன் இரண்டு சொற்களை, இப்பாடலில் பெய்துள்ளான். கண்ணுற்றான் என்று தொடங்கி, நோக்கி என்று முடித்துள்ளான். இந்த மூன்று அடிகளும் கவிஞன் கூற்று. கண்ணுற்றான் என்றால் கண்ணினாற் கண்டான் என்று பொருள்படும். நோக்கி என்றால் கருத்தினால் ஆராய்ந்து என்று பொருள்படும். எனவே, எதிரே வந்து நிற்பவனைக் கண்ணினால் முதலில் கண்டான்; பிறகு கருத்தினால் நோக்கினான். இவை இரண்டும் உடனடியாக நிகழ்ந்த செயல்கள் என்றாலும் இவற்றால் விளைந்த பயன்கள் வெவ்வேறானவை. கை-கமலம், வாய்கமலமாக, உள்ளவனைக் கண்ணினால் கண்டான். அழகே வடிவானவனைக் கண்ணினால் கண்டால் ஈடுபாடுதானே ஏற்பட வேண்டும்? பார்வை அவனிடம் ஈடுபாட்டை ஏற்படுத்த முயல்கிறது. ஆனால் இந்த அழகன் செய்த அடாத செயலைச் சிந்தித்தவுடன் சினம் பொங்குகிறது. ,