பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 கம்பன் - புதிய பார்வை யத்திற்கு ஏற்ற விழுப்பொருள்கள். அந்த நீதிகளை எங்கள் குரங்குச் சமுதாயத்திற்கு ஏற்றி நியாய, அநியாயம் காண முற்படுவது தவறு என்கிறான். அடுத்து அவை ஒருபுறம் இருக்க, போர்க்களத்தில் நேர் நின்று போர் புரியாமல், புதர் மறைந்து வேட்டுவன் போல ஏன் அம்பு எய்தாய்' என்னும் பொருளில், "செருக்களத்து உருத்து வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால் எவ்வியது என்னை” என்றான் (124). இந்த வினா எங்கே வந்துவிடுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்தான் இராகவன். இவ்வினா வந்தவுடன் இளைய பெருமாள், அண்ணனைக் காப்பாற்ற முனைந்து, எதிரே வந்தால், நீயும் அடைக்கலம் என்று வந்துவிட்டால் என்ன செய்வது என்று கருதியே, மறைந்து நின்று எய்தான் என்று விடை கூறுகிறான். இந்த விடையை இன்று படிக்கின்ற நமக்குக்கூட சிரிப்புத்தான் வருகிறது என்றால், அன்று இதனைக் கேட்ட வாலிக்கு எவ்வாறு சிரிப்பு வாராமல் இருந்திருக்கும்? வீடணன் அடைக்கலம் என்று வந்தபொழுது, இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னம் கொன்று வந்தான் என்று உண்டோ ? (வீடணன் அடைக்கலப் படலம்-100) எந்த நிலையிலும் அடைக்கலம் என்று வந்தவன்ை ஏற்பதே முறை என்று கூறும் இராமன், வாலி அடைக்கலம் என்று வந்துவிட்டால் மட்டும் கலங்கவா போகிறான்? எனவே இளையவனுடைய இந்தச் சமாதானம் நொண்டிச் சமாதானம் என்பது மட்டுமன்று, நகைப்புக்கும் இடமான ஒன்றாகும். இதனாலா மனம் மாறினான்? அப்படியானால், இந்த நகைப்புக்கு இடமான சமாதானத்தைக் கேட்டவுடன் வாலி மனம் மாறிவிட் டான் என்றல்லவா கவிஞன் கூறுகிறான்.