பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 - கம்பன் - புதிய பார்வை மாற்றிக் கண்டால் மற்றோர் உண்மையும் நன்கு புலப்படும். மருத்துவர் அறுவைச் சிகிச்சையில் நோயாளி இறந்தாலும், நாம் மருத்துவரைக் குறை கூறுவதில்லை. அதுபோல, இப்பொழுது வாலி நினைக்கத் தொடங்கிவிட்டான். அறத்தின் மூர்த்தியாகிய இராமன் அறத்திறன் அழியும்படியாக நடந்திருக்க மாட்டான் என்பதை முதலில் மனத்தில் வாங்கிக்கொண்டான். இந்த எண்ணம் தோன்றியதற்குக் காரணம் கூறிவந்த கவிஞன், 'அன்ன கட்டுரை மனத்துள் கொண்டான்' என்று நுணுக்கமாகக் கூறி விட்டுவிட்டான். அன்ன கட்டுரை என்ற சொற்களுக்கு முதல் பாடலில் உள்ள இலக்குவன் கூறிய சமாதானம் என்று பொருள் கொண்டுவிட்டால், பெரிய இடர்ப்பாடு நேர்ந்துவிடும். இந்த வார்த்தைகளாலா வாலி மனம் மாறிவிட்டான்? என்ற வினாவிற்கு விடை கூற முடியாமற் போய்விடும். எனவே அன்ன கட்டுரை எனக் கவிஞன் கூறுவது ஏதோ ஒன்றை நினைவூட்ட வேயாம் என்பதை அறிதல் வேண்டும். அது யாதாக இருக்கும் என்று ஆராயுமுன்னர், இன்னும் சில அடிப்படைகளையும் நினைவுகூற வேண்டும். முதலாவது, வாலி இராமனைப் பற்றிக் கொண்டிருந்த மிக உயரிய எண்ணங்கள். இரண்டாவது தாரையிடம் இராமனைப் பற்றி அவன் கூறிய தகவல்கள். இவை இரண்டும் கூடி, வாலியின் அகமனத்திலும், புறமனத்திலும் இராமனைப் பற்றிய மிக உயர்ந்த எண்ணங்களே நிறைந்திருந்தன என்பதையே காட்டுகின்றன. மூன்றாவது நிலையில், கார்முகில் கமலம் பூத்து, மண்ணுற்று வரிவில் ஏந்தி வருகின்ற காட்சியைக் கண்ணுற்றான் வாலி. இதற்கு ஒரு வினாடி முன்னர்தான், மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரத்தை கண்களில் தெரியக் கண்டான். அடுத்துக் கமலம் பூத்து வருவதைக் கண்ணுற்றான்.