பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 + கம்பன் - புதிய பார்வை பொருள் இதுவே. எனவே வாலி, திடீரென்று மனம் மாறக் காரணம், இலக்குவன் தந்த விடையன்று. இராகவன்பால் பெற்ற உபதேசத்தால், வாலி திடீரென்று வளரத் தொடங்கிவிட்டான். அவனுடைய இந்த ஆன்ம வளர்ச்சி யால் புதிய ஒரு பார்வை, அல்லது கண்ணோட்டம், பெறுகிறான். எல்லையில் ஆனந்தத்தில் அவிழ்ந்து விடுகிறான். இந்த ஆன்மிக வளர்ச்சியில் நின்று, அதனால் பெற்ற, புதிய கண்ணோட்டத்துடன் இந்த உலகைப் பார்க்கிறான். இந்த உலகில் உள்ள சட்டதிட்டங்கள், விழுப்பொருள்கள் ஆகிய அனைத்தும் இப்பொழுது அற்பமானவையாக, அவன் அறிவுக்குப் படுகின்றன. முன்னர் உலகியல் நிலையில் நின்று பார்க்கையில், சில கட்டுப்பாடுகள் இருந்தன. தூரப் பார்வை இல்லை. எதிர்காலத்தை அறிய முடியவில்லை. விருப்பு வெறுப்புகள் நிறைந்து இருந்தன. நண்பர், பகைவர், நொதுமல் என்ற வேறுபாடுகள் இருந்தன. இன்னுங் கூற வேண்டுமானால் நன்மை-தீமை, ஒளி-இருள்; பாவம்-புண்ணியம் என்ற இரட்டைகள் இப்பொழுது அர்த்தமற்றவையாய் விட்டன. கீதையின் வழியில் கூறவேண்டுமானால் வாலி ஸ்திதப் பிரக்ஞன் ஆகிவிட்டான். சமதிருஷ்டி பெற்றுவிட்டான். எனவேதான் பழைய விழுப்பொருள்கள் சிறியனவாகி விட்டன. இப்பொழுது புதிய விழுப்பொருள்களைப் பெற்றுவிட்டான். இந்தப் புதிய விழுப்பொருளை எவ்வாறு பெற்றான்? எப்பொழுது பெற்றான்? இதோ அவனே விடை கூறுகிறான். 'ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன் ஆவிபோம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்; மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகைவும் நீ! உறவும் நீ! (வாலி வதைப் படலம்-129)