பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 387 ஆம்! எப்பொழுது புதிய விழுப்பொருளைப் பெற்றான்? ஆவிபோம் வேளையில் பெற்றானாம். எவ்வாறு பெற் றானாம்? ஏவுகூர் வாளியின் மூலம் பெற்றானாம். பெற்ற தனால் விளைந்த பயன் யாது? துவந்தங்கள் எனப்படும் இரட்டைகள் ஒழிந்து சமதிருஷ்டி கிடைத்தது. இதைத்தான் வாலி விளக்குகிறான்; "இந்த விழுப்பொருள் கிடைக்குமுன் உன்னைத் தசரத புத்திரன் இராமன் என்று நினைத்து, என் உயிரைப் போக்கும் பகைவன் என்று எண்ணி, நீ பாபம் செய்துவிட்டாய் என்று முடிவுக்கு வந்து, உலகம் உள்ளளவும் பழி பூண்டுவிட்டாய் என்று கருதிவிட்டேன். இப்புதிய அறிவை நீ தந்தவுடன், நீ தசரதன் மகன் அல்லை. நீயே மூவர்! நீயே முதல்வன்! நீதான் புகழ்! நீதான் இகழ்! நீதான் பாபம்! நீதான் புண்ணியம் பகையும் நீயே, உறவும் நீயே, உன்னை அன்றி மற்று ஒன்றும் இல்லை என்ற புதிய விழுப்பொருளைப் பெற்றுவிட்டேன்” என்று கூறுகிறான் வாலி. இன்னும் ஒருபடி மேலே சென்றும் பேசுகிறான். இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்களாக (சர அசரம்) உள்ளாய். பூவும் அதில் உள்ள மணமும் போல எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கின்றவன் என்று அறிஞர் கூறுவதை இன்று உணர்ந்து கொண்டேன்’ என்ற பொருளில், "யாவரும் எவையுமாய், இருதுவும் பயனும் ஆய் பூவும் நல்வெறியும் ஒத்து, ஒருவ அரும்பொதுமையாய் ஆவது நீ ஆவது” என்று அறிவினார் அருளினார்; தாஅரும்பதம் எனக்கு அருமையோ? தனிமையோய் - (வாலி வதைப் படலம்-13) என்றும் கூறுகிறான். வாலியின் மனத்தில் நிகழ்ந்த இந்த விழுப்பொருள் மாற்றத்தை உணர்ந்து கொண்டவன் இராமன் ஒருவனே ஆவான்.