பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 391 'மலரின்மேல் இருந்தவள்ளல் மறுஇலா வரத்தினால், நீ உலைவு இலாத் தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய்; தலைவன் நீ உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்; புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால்' (கும்பகர்ணன் வதைப் படலம்-15) என்று திட்டவட்டமாகக் கூறுகிறான். மனிதன் ஒருவனுக்குத்தான் விழுப்பொருள் என்ற ஒன்று உண்டு. குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவன் மனிதன்தான். குறிக்கோள் இலாத வாழ்க்கை விலங்கு வாழ்க்கையே ஆகும். அந்தக் குறிக்கோள் உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் இருக்க வேண்டுமாயின், வாழ்க்கையில் சில உயர்ந்த விழுப் பொருள்கள் இருத்தல் வேண்டும். இலக்கியத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் விழுப்பொருளை உயிரினும் மேலாகப் போற்றும் பாத்திரங்களாகத்தான் அமையும். அதில் தனிமனித விழுப்பொருள், சமுதாய விழுப்பொருள் என இருவகை உண்டு. தனிமனித விழுப்பொருள்களை மாற்றிக்கொள்கிறவர்கள் உண்டு. மாற்ற, மறுப்பவர்களும் உண்டு. ஆனால் சமுதாய விழுப்பொருள்கள், காலத்துக்கு ஏற்ப மாறும் இயல்புடையன. தனிமனிதர்கள் கொண்ட விழுப்பொருள்களும் தக்க காரணங்களால் மாறும் இயல் புடையன. உறவு காரணமாக இருவர்க்கு ஒரே வகையான விழுப்பொருள்தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஆக விழுப்பொருள் இல்லாதவன் மனிதனே அல்லன்' என்பது கம்பநாடன் காப்பியம் காட்டும் உண்மை.