பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 23 தமிழ் நூல்களைத் தானே பாடினான். பண்ணுடன் கூடிய இனிய பாடல்களை என்னுள் புகுந்து தானே பாடிக் கொண்டான்.' - ஏன் இவ்வாறு கூறுகிறான்? புதியதும் ஆழமானதுமான ஒரு கருத்தை உட்கொண்டு காப்பியம் இயற்றப்போகும் ஒரு கவிஞனுக்கு இத்தகைய ஆழமான இறையுணர்வு இருந்தால்தான் அவன் மேற்கொண்ட செயலில் வெற்றியைக் காண முடியும். எனவே தமிழ்நாட்டில் பெரிதும் வழக்கத்தில் இருந்த ஒரு பழைய கதையைச் செய்யுள் வடிவில் பாடுவதாக மட்டும் அக் கவிஞர் பிரான் கருதவில்லை என்று தெரிகிறது. அப்படியானால் திருமாலிடத்து மக்கட்குப் பக்திப் பெருக்கம் ஏற்பட வேண்டும் என்ற கருத்தில் ஒருவேளை இவ்வாறு கூறினானோ என்ற ஐயமும் தேவை இல்லை. அவனுக்கு முன்னர்த் தோன்றிய சங்க இலக்கியம், திருக்குறள் என்பவற்றில் துளைந்தாடிய இக் கவிஞன், தேவார பிரபந்தங்களிலும் பெரிதும் ஈடுபட்டிருக்கின்றான் என்பதை, அவன் நூலை ஒருமுறை கற்பாரும் அறிந்து கொள்ள முடியும். எனவே ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் வளர்க்காத திருமால் பக்தியைத் தான் வளர்த்து விட முடியும் என்றோ, வளர்க்கவேண்டும் என்றோ அவன் கருதினான் என்று நினைப்பதும் கவிஞனுக்கு நாம் செய்யும் பழியாகும். அப்படியானால் வேறு ஏதோ ஒரு கருத்தை மனத்துட் கொண்டுதான் அவன் இவ்வாறு கூறியிருத்தல் வேண்டும். அதுவரை யாரும் கூறாததும் புதுமையானதுமான ஒரு சோதனையைச் செய்யப் போகின்றானாகலின், தன்னை முழுவதுமாக இறை அன்பில் ஈடுபடுத்திக் கொண்டு அவன் அருளால் இக்காரியம் நிகழப்போகின்றது என்பதைக் குறிப்பாகப் பேசுகிறான் கவிஞன். .