பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கம்பன் - புதிய பார்வை யார் பாடியது? இனி அடுத்துள்ள பாடல் சற்று ஐயத்தைத் தருகின்ற ஒன்றாகும். தேவ பாஷையாகிய வடமொழியில் இக்கதை யைக் கூறினவர் மூவர். அவருள் முதலில் சொன்னவரை அடியொற்றி நான் தமிழ்ப் பாடல்களால் இதை கூறப் போகிறேன் என்ற பொருளில் பாடல் அமைந்துள்ளது. தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திப் பண்பரோ! > (பாயிரம்-10) இப்பாடலில், இராமகதையை வடமொழியில் செய் தவர் மூவர் என்று மட்டுமே கூறப்பெற்றுள்ளது. இந்த மூவர் யார் என்று விளக்கம் கூறவந்த திரு வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் அவர்கள், மூவர் என்பவர் வான்மீகி, வசிட்டர், போதாயனர் என்ற மூவர் என்று கூறிவிட்டு, வசிட்டர் செய்தது வாசிஷ்ட ராமாயணம் என்றும், போதாயனர் செய்தது போதாயன ராமாயணம் என்றும் கூறுகிறார். இக் கருத்துக்கு மாறுபாடாக வசிட்டர் பெயரை நீக்கிவிட்டு வியாசர் என்று கூறி அவர் செய்தது அத்யாத்ம ராமாயணம் என்று பலர் கூறுவர் என்றும் அவரே கூறுகிறார். இதற்கு அடுத்த வாக்கியத்தில் இன்னுஞ் சிலர் இந்த மூன்று இருடியரினும் மேம்பட்ட நாவையுடைய ஆழ்வார்கள் என்று பொருள் கூறுவாரும் உளர் என்று கம்பநாடனுடைய பெருங்காப்பியத்திற்கு உரையிட்ட திரு. வை. மு. கோ. அவர்களே குறிக்கின்றார். இந்த மூவர் என்பவர்கள் வான்மீகி, பாஸ்கவி, காளிதாசன் என்பவர்களாவர் என்று கூறுபவர்களும் உண்டு. இத்துணை இடர்ப்பாட்டிற்கும் காரணமாய் அமைந்த சொல் மூவரானவர் என்பதாகும். உண்மையிலேயே கம்பநாடன் வான்மீகிக்கு நன்றி பாராட்ட நினைத்திருந்தால்