பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 27 61 பாடல்களில் நாட்டு வருணனை பேசுகிறான். இதிலிருந்து ஒன்றை ஊகிக்க இடம் உளது. பிற்காலத்தில் வான்மீகி பக்தர்கள் இந்தப் பாடலையும் எழுதி உள்ளே திணித்துள்ளனர் என்பதேயாகும். ஏன் திணித்தனர்? இத்துணை அளவு இதுபற்றிக் கூற ஒரு தக்க காரணம் உண்டு. கம்பநாடன் அதற்கு முன்னர் யாரும் சிந்தித்துக் கூறாத ஒரு கருத்தை நூல் முழுவதும் பேசிக்கொண்டு செல்லப் போகின்றான். அது அவனே சிந்தித்து முடிவு செய்ததாகும். பழைய தமிழ் மரபு பற்றி வந்த ஆசிரிய மாலைப் பாடல்கள்தாம் அவனை இப்புது வழியில் சிந்திக்கத் துண்டின என்று கருதுவதில் தவறு இல்லை. வான்மீகக் கதையை எடுத்துக் கொண்டான்; அதில் வரும் பாத்திரங்களையும், பல நிகழ்ச்சிகளையும் ஏற்றுக் கொண்டான். ஆனால் இவை அனைத்தையும் பெரிய அளவில் மாற்றம் செய்துவிட்டான். இதனை அறிந்த பிற்காலச் சுவைஞர்களுள் யாரோ ஒருவர் வான்மீகத் திற்குத்தான் கம்பன் கடன்பட்டான் என்று முடிவு கட்ட விரும்புகிறார். அவர் இந்த முடிவுக்கு வருகின்ற காலத்தில் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராம காதை பல்வேறு மாறுபாடுகளுடன் வேரூன்றி வளர்ந்துவிட்டதை அறிகிறார். இக்கதைகளுள் ஏதோ ஒன்றைக் கம்பன் அடித்தளமாகக் கொண்டான் என்று எங்கே பிறர் கருதி விடுவார்களோ என்று நினைத்து ஒன்றுக்கு இரண்டாகப் பாடல்களைப் பாடித் தக்க இடத்தில் செருகிவிட்டார் என்று ஊகிக்கலாம். வான்மீகியிடம் கதையைப் பெற்றிருந்தாலும் தமிழ் மரபுக்கு ஏற்ப அக்கதையை வளைத்துத் திருப்பித் தன் கருத்துக்கும் குறிக்கோளுக்கும் ஏற்ப எவ்வாறு அமைக்கின்றான் என்பதை அடுத்துக் காண்டல் வேண்டும்.