பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 + கம்பன் - புதிய பார்வை இரண்டு பிரிவுகளையும் வாழ்க்கைக் கூறுடன் சேர்த்து முதல், கரு, உரி என்றே கூறினர். அத்துடன் நில்லாமல் இவை ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத தொடர் புடையன என்பதையும் கூறினர். முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறை சிறந்தனவே. (தொல்-அகத்திணை-3) உலகத் தோற்றத்தைப் பற்றிக் கூறும் விஞ்ஞானிகள் கூட முதலில் தோன்றியது உலகம் என்றும், அதனுடன் தோன்றியது பகலும் இரவும் என்றும் கூறுவர். அடுத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துக் கருப்பொருள் என்று தமிழ் இலக்கணம் கூறும் விலங்குகள், பறவைகள் முதலாய உயிர் வருக்கங்கள், இவற்றுடனோ அன்றி இவற்றின் முன்னோ தோன்றிய நிலையியற் பொருளாகிய மரம், செடி, கொடி முதலியன தோன்றின. இவை தோன்றிய பிறகு பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் மனிதன் தோன்றி வளர்ந்தான் என்று கூறுவர். இதனைக் கூர்தல் அறம் (Evolution) என்பர் இற்றை நாள் அறிவு நூலார். இக்கருத்தைத்தான் பழந்தமிழ் இலக்கணமாகிய தொல் காப்பியம், - 'முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே என்று அறுதியிட்டுக் கூறிவிட்டு, அடுத்த அடியில் நுவலுங்காலை முறை சிறந்தன என்று பேசுகிறது. அதாவது சிந்தித்துப் பேச வேண்டுமாயின் இவை ஒன்றைவிட ஒன்று கூர்தல் முறையில் வளர்ச்சி பெற்றுச் சிறந்தன என்கிறது அவ்விலக்கண நூல். தொல்காப்பியப் பொருளதிகாரம் என்பது, வெறும் மொழிக்கு மட்டும் இலக்கணம் கூறும் எழுத்து, சொல் என்பவற்றின் தொடர்பாய், அந்த எழுத்தையும் சொல்லையும் கண்டுபிடித்துப் பயன் படுத்தும் மனிதனுடைய வாழ்வுக்கு இலக்கணம் கூறும்