பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கம்பன் - புதிய பார்வை டாலும் தமிழ் நாடென்பது தெற்கு வடக்கில் 800 கி.மீ. கிழக்கு மேற்கில் 700 கி.மீ அளவில்தான் உள்ளது. இந்தச் சிறிய பகுதியை அக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவர். இவர்களுடைய எல்லைக்குள் பல்வேறு சிற்றரசர்கள். ஏறத்தாழ இன்றைய மாவட்ட அளவில்கூட இல்லாத பகுதியை ஆண்ட சிற்றரசர்களும் உண்டு. முடிமன்னர் மூவருள்ளும் இம்மூன்று முடிமன்னருள்ளும் ஓயாத, ஒழியாத போர்கள். இவர்கள் சிலகாலம் வாளா இருப்பினும் இவர்களைத் தூண்டிவிட்டுப் போர் செய்தவர்களும் உண்டு. பழந்தமிழ் மன்னருள் போரிடாத மன்னனே இல்லை என்று கூறும் அளவிற்கு இவர்களிடையே போர்கள் நிகழ்ந்தன. இவற்றை அல்லாமல் சோழர்கள் எனப்படுவோருள்ளும் அரசு கட்டில் குறித்த போர்கள் நிகழ்ந்துள்ளன. தந்தை மகன் இருவருள்ளுங்கூட அரசு கட்டில் குறித்துப் போர் நிகழ்ந்துள்ளது. இவை சின்னஞ்சிறிய சண்டைகள் என்று கருதுவதனால் தவறு இல்லை. இவற்றை அல்லாமல் இம்மூவருள்ளும் யாராவது ஒருவர் மிக்க வன்மையுடையவராக வந்தபொழுது, ஏனைய இருவருடைய நாட்டையும் கவர்ந்து கொள்ளுதல் இயல்பாக இருந்துள்ளது. கரிகாலன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், நெல்வேலி வென்ற நெடுமாறன், சேரன் செங்குட்டுவன் போன்றோர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் ஒரு குடைக்கீழ் இருந்தது உண்மைதான். ஆனால் அது மிகமிகச் சுருங்கிய காலமேயாகும். எஞ்சிய காலம் முழுவதும் இம் மூவருள்ளும் ஓயாத, ஒழியாத போர்தான். இவர்கள் போரிடாத நேரங்களில் இவர்களின் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள் தம்முள் போரிட்டனர். - -