பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 + கம்பன் - புதிய பார்வை உரை எழுதியவர்கள் தம்முள் மாறுபடுகின்றனர். கடவுள் கொள்கை இருந்தது என்று நினைப்பதைக் காட்டிலும் கடவுள் நம்பிக்கை ஆழமாக இருந்தது என்று கருதுவதில் தவறு இல்லை. ஆன்ம விசாரணையில் செல்பவர், முதலாவது, தம் எண்ணத்தை, சிந்தனையைப் புறத்தே செல்லவிடாமல் தடுத்து, அகமுகமாக (உள்நோக்கி)ச் செலுத்தல் வேண்டும். இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்களாயிற்றே இவர்கள்! அப்படி இருக்க, அந்த இயற்கையின் மூலமாகவேனும் ஆன்ம விசாரணையில் சென்றிருக்கலாகாதா என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இயற்கையைக் கண்டு அனுபவிப்பது வேறு; அதனுடன் ஒன்றித் தானும் அதனுடைய ஒர் உறுப்பு என்று கருதுவது வேறு. இரண்டாவது வழியில் சென்றிருந் தால், நான் யார் என்ற வினாவை என்றாவது ஒருநாள் சந்தித்திருக்க வேண்டும். அப்படிச் சந்தித்து, அகநோக்கில் அறிவைச் செலுத்தினவர்கள் இல்லாமல் இருந்திருக்க முடியாது. அவர்களுடைய சிந்தனையின் பயனை அவர்கள் குறித்து வைக்கவில்லை, அல்லது அதுபற்றிச் சமுதாயம் கவலை கொள்ளாததால் அக் குறிப்புகள் காப்பாற்றப்பட வில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுளது. அறிவுக்கும், அதன்வழிச் செல்லும் புலனடக்கத்திற்கும் உரிய இடத்தைப் பழந்தமிழ்ச் சமுதாயம் தராமையால்தான், களப்பிரர் போன்ற பிறநாட்டவர் இங்கு நுழைந்தவுடன் இவர்களை வெற்றிகொள்ள முடிந்தது. மொகஞ்சோதாரோ ஹாரப்பாவரை பரவி இருந்த இத் தமிழர்களின் செல்வாக்கை யும் இழந்ததும் இதன் காரணமாகவே இருக்கும் போலும்! தமிழ்ச் சமுதாயத்தில் வாழ்வியல், அரசியல் என்ற இரண்டிலும் இருந்த இந்த அடிப்படையான குறைகளைக் கம்பநாடன் பெரிதும் சிந்தித்திருக்கின்றான். அந்தச் சிந்தனை யின் பயனாகத் தன் ஒப்பற்ற காப்பியத்தில் என்ன புதுவழி களைக் காட்டினான் என்பதைப் பின்னர்க் காணலாம்.