பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 61 பயன்படுத்துகிறோனோ அன்றுதான் அவன் மனிதன் என்ற பெயருக்கு உரிமை உடையவனாகின்றான். பொறி புலன்களைச் சென்றவிடத்தால் எல்லாம் செல்லவிடாது, அவற்றை அடக்கி நன்றின்பால் உய்ப்பதே அறிவாகும். பொறி புலன்களை அடக்கி ஆள வேண்டியவன் பகுத்தறிவுடைய மனிதன். மனத்தின் துணை கொண்டு மனிதன் பொறிகளை அடக்கி வழிப்படுத்தித் தக்கவழியில் செலுத்த வேண்டும். மோட்டாரை ஒட்டுபவனிடம் திசை திருப்பி (Steering wheel) தரப் பெற்றுள்ளது. அதனை அவன் நன்கு பயன்படுத்தினால் விரும்பிய இடத்திற்குப் போய்ச் சேரலாம். திசை திருப்பியை நன்கு பயன்படுத்தவில்லை யாயின் சாலையிலுள்ள மரத்தில் மோதி உயிர் விடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. சாக்ரட்டீஸ், பிளேட்டோ போன்ற ஞானிகள் இருந்தும் கிரேக்க நாகரிகத்தை, சமுதாயத்தைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது. காரணம் கிரேக்க மக்கள் புலனடக்கம் என்பதைப் பின்பற்ற மறந்தனர்; மறுத்தனர். அதன் பயன் அந்த நாகரிகம் இன்று பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டது. இத் தமிழகத்திலும் சங்க காலத்தில் ஏறத் தாழ அதே நிலைதான் இருந்து வந்தது. புலன் அடக்கம் என்பதைப் பற்றி யாரும் அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆயிரக்கணக்கான பாடல்கள் இருந்தும் புலனடக்கம் பற்றிப் பேசும் பாடல்களைக் காண முடிய வில்லை. கட்டமை ஒழுக்கத்துக் கண்ணமை (புறத்-2) என்ற தொல்காப்பிய சூத்திர அடிக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர், கட்டுதலமைந்த ஒழுக்கத்தோடு பொருந்திய காட்சி என்று பொருள் கூறி, அதற்கு விளக்கவுரையாக ஐம்பொறிகளை வென்று தடுத்தல்' என்றும் கூறுகிறார். தொல்காப்பியச் சூத்திரங்கட்கு உரை செய்யும் பொழுது சங்கப் பாடல்கள், பெயர் மறைந்து