பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 63 மாகும். மனித முயற்சிகள் அனைத்துள்ளும் மிகக் கடினமானது புலனடக்கம் ஒன்றுதான். இதனை முற்றிலும் செய்து வெற்றி கண்டவர்கள், உலகம் தோன்றிய நாளிலிருந்து ஒரு சிலரே ஆவர். பன்னெடுங் காலம் ஒருமுகப்பட்ட சித்தத்துடன் தவம் இயற்றிய விசுவா மித்திரன் போன்றவர்கள், ஒரே நாளில் புலனடக்கம் ன்மையால் அதனை இழந்த வரலாற்றைக் கேள்விப்படுகிறோம். எனவே அது மிகமிகக் கடினமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். ஆனாலும் கடினம் என்ற காரணத்தால் அதனைப் பெற முயலாமல் இருப்பதும் அறிவுடைமை ஆகாது. ஒவ்வொரு மனிதனும் இம் முயற்சியை வாணாள் முழுதும் செய்துகொண்டே இருத்தல் வேண்டும். எந்த அளவிற்கு முயற்சியோ அந்த அளவிற்கு வெற்றி காண முடியும். தமிழர்கள் என்றுமே மறுபிறப்பையும் கூர்தல் அறத்தையும் (Evolution) நம்புகின்றவர்களாகலின் எடுத்த முயற்சியில் ஒரளவு வெற்றி பெற்றால்கூட அடுத்த பிறப்பில் விட்ட இடத் திலிருந்து தொடங்கலாம் என்று நம்பினர். ஓர் இன மக்களுள், எவ்வளவுக் கெவ்வளவு அதிகமானவர்கள் இதனைக் கடைப்பிடிக்கின்றார்களோ அந்த அளவுக்கு அந்தச் சமுதாயம் அல்லது இனம் முன்னேறும். கிரேக்க, மெசபொட்டேமிய, சுமேரிய, எகிப்திய, உரோமானிய நாகரிகங்கள் ஒகோ என்று வளர்ந்தும், இன்று இருந்த இடம் தெரியாமல் போனதற்குரிய காரணங்களுள் முக்கியமான காரணம், அம் மக்களிடை இப் புலனடக்கம் இன்மைதான். புலனடக்கம் இல்லாத விடத்து வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் எதுவும் இருத்தற்கில்லை. புலனடக்கமும், குறிக்கோளும் இல்லாத மக்கள் நிறைந்த இனம் எத்துணைப் பெரிய பேரரசை நிறுவி ஆட்சி செய்தாலும், அது மணலால் கட்டிய வீடாகவே இருக்கும்.