பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - கம்பன் - புதிய பார்வை தன்னலம் இல்லாமற் போகவே அன்புடைமை ஏற்படும். தன்னலமில்லாதவன் பிறரிடம் பகை, காழ்ப்பு, வெறுப்பு முதலியன கொள்ளமாட்டான். அனைத்து உயிர்களையும் உடன்பிறந்தவையாகப் பாவிக்கும் உயர்ந்த பண்பு ஏற்பட்டு விடும். அனைத்துயிர்களிடமும் அன்பு தோன்றவே, அவனிடம் அருள் நிரம்பத் தொடங்கிவிடுகிறது. அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர்-அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (திருக்குறள்-72) (அன்பில்லாதவர்கள் தன்னலப் பிண்டமாக இருப்பர். அன்புடையார் தம் எலும்புகளைக் கூடப் பிறர்க்கு உதவப் பயன்படுத்துவர்.) எனவே ஒருவன், சாதாரண மனிதனாக இருக்கும் நிலைமையைக் கடந்து மகாத்மாவாக ஆக வேண்டு மானால், அருளுடையவனாக இருத்தல் வேண்டும். அதற்கு முதலில் அன்புடையவனாக ஆதல் வேண்டும். அன்புடைய வனாக ஆதற்குத் தன்னலத்தைத் தியாகம் செய்ய வேண்டும். தன்னலத்தைத் துறப்பதற்குப் புலனடக்கம் தேவை. எனவே எல்லாவற்றிற்கும் புலனடக்கமே முதற்படி என்பதை எளிதில் அறியலாம். இது கருதித்தான் போலும் திருவள்ளுவர் இதனை மிகவும் வலியுறுத்திச் சென்றார். சால்புடைமை, பண்புடைமை என்பவற்றிற்கெல்லாம் புலனடக்கமே மூலகாரணம் என்பதை அறிய வேண்டும். பண்பெனப்படுவது பாடு அறித்து ஒழுகுதல் - (கலித்தொகை-133) (உலகநடை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப வாழ்வதே பண்புடைமை எனப்படும்.) பண்புடையார்க்குப் பட்டு உண்டு உலகம் அஃதுஇன்றேல் மாண்புக்கு மாய்வது மன் (திருக்குறள்-996)