பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 + கம்பன் - புதிய பார்வை என்று கூறுகிறார் திருமூலர். எனவே அன்பு ஒன்றே மனித வாழ்வின் அடித்தளம் என்பதை இத் தமிழர்கள் அன்றே கண்டுவிட்டனர். முதலில் புலனடக்கத்தை வலியுறுத்தி, இரண்டாவதாக அன்புடைமையை வலியுறுத்தினார்கள். மனிதன் பிறக்கும்பொழுது தன்னல வடிவினனாகவே பிறந்தாலும் அவனிடம் அன்பு தோன்றி வளர்வதற்கு இல்லறம், புதல்வரைப் பெறுதல் முதலியன துணை புரிகின்றன. விருந்தோம்பலை இத்தமிழர் அத்துணைத்துரம் வலியுறுத்தியதற்குக் காரணம் அன்பை வளர்க்கவேயாம். இனி இந்த அன்பைக் குலைக்க முயலும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் முதலியவற்றையும் போக்க வேண்டும் என்று கூறுகிறது அறநூல். ஆழ்ந்து நோக்கினால் மனிதன் அன்பை வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுக்குத் துணையாக இல்லறம் முதல் விருந்தோம்பல் வரைதுணை புரிகின்றன. இக் குறிக்கோளை அடைய விடாமல் தடை செய்யும் அழுக்காறு முதலியவற்றைக் கவனமாக இருந்து தன்னிடம் வராமல் பாதுகாக்க வேண்டும். எதிர்மறை வழி, உடன்பாட்டு வழி என்ற இந்த இரண்டுமே மனிதனை அன்புடையவனாக, அடுத்து அருளுடையவனாக ஆக்கவே கூறப்பெற்றன. கொள்ளத்தக்க, இல்லறம் விருந்தோம்பல் முதலியவற்றை வளர்க்கவும், தள்ளத்தக்க, அழுக்காறு முதலியவற்றை விலக்கவும் ஒருவன் என்ன செய்யவேண்டும்? புலனடக்கம் ஒன்றேதான் இதற்கு வழியாகும். - எனவே நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கம்பநாடன் புலனடக்கம், அன்புடைமை, அருளுடைமை என்பவற்றை முற்றிலும் கைவரப்பெற்ற ஒரு தலைவனை உற்பத்தி செய்ய முடிவு செய்துகொண்டான். அந்த முடிவைத் தனக்கே உரிய முறையில் ஈடும் இணையும் இல்லாமல் கொண்டு செலுத்தினான். கம்பனின் இராம காதையை இப் புதிய கண்ணோட்டத்தில் காண்பதே நம் நோக்கமாகும்.