பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 கம்பன் எடுத்த முத்துக்கள் புதிய வாலியிடம் தோன்றப்போவதில்லை என்பதையும் கவிஞன் விளக்கிவிடுகிறான். - அவியுறு மனத்தனாக மாறிவிட்ட ஒருவன் சிறியன. சிந்திக்கமாட்டான் என்று சொல்லத் தேவையில்லை. அப்படியிருக்க, சிறியன சிந்தியாதான் என்று கவிஞன் தரும் அடைமொழி வாலி முழு ஆன்மீக வளர்ச்சி பெற்று, சம திருஷ்டி உடையவனாக ஆகிவிட்டான் என்று உடன்பாட்டுமுகமாகக் கூறாமல், கவிஞன் தனக்கே உரிய பாணியில் சிறியன சிந்தியாதான் என்று கூறுகிறான். அன்ன கட்டுரை என்பதற்கு இலக்குவன் கூற்று என்று பொருள் கொள்ளாமல், இராமன் சொற்கள் என்று பொருள் கொண்டு, வாலியின் மனமாற்றம் இனிப் பேசப்படுகின்றது. நகைப்பைத் தரக் கூடிய இலக்குவன் விடையைப் பேரறிவாள னாகிய வாலி மனத்துள் வாங்கிக்கொண்டவுடன் மனம் மாறினான் என்ற கூற்றை மறுத்து, இனி வரும் பகுதியில் வாலியின் மனமாற்றத்திற்குக் காரணம் ஆயப்படுகின்றது. அவ்வாறாயின் அன்ன கட்டுரை என்ற தொடருக்கு வேறென்ன பொருள் கூற முடியும் இலக்குவன் விடையைத் தொடர்ந்து இப்பாடல் வருதலின் அன்ன என்ற கட்டுச் சொல்லுக்கு இவ்வாறு பொருள் கூறினர். உண்மையில், 'அன்ன என்ற சுட்டு இராமனுக்கும் வாலிக்கும் நடந்த வாதங்களையும் அதில் இராமன் கூறிய விடைகளையும் மனத்துட் கொண்டான் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். இராமனுடன் வாதிடுகின்றவரையில் இராமன் கூறுகின்ற சொற்கள் வாலியின் காதுகளுள் புகுந்து அவன் புற மனத்திலேயே தங்கிவிட்டன. உடனே எதிர்வாதம் செய்ய வேண்டும் என்ற கருத்தோடு இராமன் சொற்களை வாலி கேட்டான் ஆதலின் இதுவரை, அச்சொற்கள் மனத்தில் (புறமணத்தில்) பதிந்தனவே யல்லாமல் மனத்துள் (அகமனத் தில்) புகவே இல்லை. வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் ஒய்ந்து விட்ட நிலையில் இராமனுடைய சொற்கள் வாலியின் மனத்துள் (அகமனத்துள்) செல்ல முற்பட்டன. அவை செல்லுமாறு வாலியின் மனநிலை மாற்றம் கொண்டுவிட்டது.