பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 175 வாளேந்தியவர்கள் வகிப்பார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு பொறுப்பைக் கிட்கிந்தையில் அங்கதனிடம் இராமன் ஒப்படைப்பதற்கு என்ன நிகழ்ந்தது: ஒரு காரணமோ நிகழ்ச்சியோ இல்லாமல் திடீரென்று தன் உடைவாளை நீட்டி நீ இதை வைத்துக்கொள் என்று இராகவன் கூறினால், அர்த்தமற்ற செயலாக ஆகிவிடும். கம்பன் இத்தகைய பாடல்களை மறந்தும் பாடமாட்டான். எனவே, இத்தொடருக்கு ஆழமான பொருள் இருத்தல் வேண்டும். முன்னர்க் கூறப்பெற்ற அம்பு தொடுத்ததற்குப் பின்னர் வாலியின் மனநிலை மாற்றத்தையும் அதனால் இராமனுக்கு ஏற்பட்ட மனநிலை மாற்றத்தையும் மனத்தில் வாங்கிக்கொண்டால், இத்தொடரின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள முடியும். மனம் வருந்திய இராகவன் நேரிடையாக, சிறுவனாகிய அங்கதனிடம் மன்னிப்புக் கேட்பது பொருத்தமற்ற தாகிவிடும். எனவே, நேரிடையாக, நடைபெற்ற செயலைப் பொறுத்துக்கொள்க’ என்று கூறாமல், அரசனாகிய தன்னுடைய தலைமை அதிகார அடையாளப் பொருளாகிய வாளை வாலியின் மைந்தனாகிய அங்கதனிடம் நீட்டி, இங்கே நடைபெற்றவற்றை நீ பொறுத்துக் கொள்க’ என்று கூறினான். வாளையொருவனிடம் நீட்டும்போதே அதனை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சொல்லாமல் விளங்கும். அப்படியிருக்க, 'நீ இது பொறுத்தி நீ இதனைப் பொறுத்துக் கொள்வாயாக’ என்பது பலனில்சொல் பாராட்டுதலாகும். "தென்சொற் கடந்து வடசொற்கடற்கு எல்லை தேர்ந்தவனாகிய இராகவன் திருவாயில் இத்தகைய வெற்றுச் சொற்கள் வரா. மேலும், பக்கத்தில் நின்ற சுக்கிரீவன்கூடத் தன் சொல்லின் ஆழத்தைப் புரிந்துகொள்ளா வகையில் அறத்தின் நாயகன், இம்மறச் செயலுக்கு வருத்தத்தைத் தெரிவிக்கிறான். உடனிருந்த சுக்கிரீவனுக்கோ பக்கத்தில் நின்ற இலக்குவனுக்கோ, குழம்பிய மனநிலையில் ஏற்றுக்கொண்ட அங்கதனுக்கோ, நீ இது பொறுத்தி' என்ற சொற்களின் ஆழமும், பொருட் செறிவும் தெரிந்திருக்கா என்று நினைய வேண்டியுள்ளது. ஆனால், இச்சொற்கள் யார் காதில் விழவேண்டுமென்றும், யார்