பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் . 35 . இராவணன் : மகன் இந்திரசித்தனுடன் பேசிய சொற்களை வைத்து அவன் வாழ்வின் முடிவை இராவணன் அறிந்துகொண்டான் என்றும், எஞ்சிய நாட்களை எவ்வாறு கழிக்க வேண்டும் என்றும், இறுதிவரையில் தான் என்ன செய்ய வேண்டும் என்றும் எல்லா வகையிலும் ஆய்ந்து, தெளிந்து, ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் எனக் கண்டோம். இந்திரசித்தன் முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்று கும்பகர்ணன் முன்னரே கூறியுள்ளான். இப்பொழுது இந்திரசித்தனும் அதையே கூறினான். அப்படி இருந்தும் மறுபடியும், நிகும்பலை அழிந்த பின்னும், இந்திரசித்தனைப் போருக்கு அனுப்பினான் இராவணன் என்றால், இராவணன் மனநிலையை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. இந்த நிலையில் இராவணன் மனத்தில் சகோதர வாஞ்சையோ, புத்திர வாத்சல்யமோ, சீதையின்மாட்டுக் காமமோ இல்லை. குலத்து மானத்தை இறுதிவரை நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. மூவுலகுக்கும் அச்சமூட்டிய இராவணன், மனிதனிடம் அஞ்சி ஓடினான் என்ற அபவாதத்தை அவன் ஏற்கத் தயாராயில்லை. மானம் இழந்து தான் வாழவிரும்பாத போது இந்திரனை வென்ற மகனும் வாழக்கூடாது என்ற எண்ணம் அவனுடைய அடிமனத்தில் இருந்திருத்தல் வேண்டும். அதனாலேயே அவன் இறப்பது உறுதி என்று அறிந்திருக்கம் அவனை மறுபடியும் போருக்கு அம்ைபுகிறான். இவ்வளவு உறுதிப்பாட்டுடன் இராவணன் இருந்தான் என்றாலும், இந்திரசித்தன் இறந்தபொழுது அவன் நிலைகுலைந்துவிட்டான் என்பது அவன் கதறி அழும் பாடல்களில் நமக்கு நன்கு விளங்குகின்றது. இதுவரை குலத்து மானம் காக்க இட்ட பலி என்று பேசிக்கொண்டு வந்த இராவணன், இந்திரசித்து இறந்த பிறகு, அவன் மனத்தின் ஆழத்தில் புதைந்திருந்த எண்ணம் வெளிப்படுகிறது. வாய், குல மானம் என்று பேசினாலும், அடிமனத்தில் தன்னலம் நிறைந்திருந்தமையாலேயே இந்த விபரீத விளைவு ஏற்பட்டது என்பதை மகனை நோக்கி அழும்பொழுது அவனையும் அறியாது சொல்லிவிடுகிறான்.