பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 . கம்பன் எடுத்த முத்துக்கள் பாயிரம் என்ற பொதுத்தன்மையுடைய பகுதிபோகப் பால காண்டம் ஆற்றுப் படலத்தில் தொடங்கிப் பரசுராமப் படலம் ஈறாக 23 படலங்களாக வகுக்கப்பெற்றுள்ளது. இப்படலங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றிலுள்ள அருமைப்பாட்டை ஆராயலாம். ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் என்பன ஒரு தொகுதி. இதனை அடுத்துத் திரு அவதாரப் படலம், கையடைப் படலம், தாடகை வதைப் படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம் என்பன ஒரு தொகுதி. இறுதியாக எதிர்கொள் படலம், கோலங்காண் படலம், கடிமணப் படலம், பரசுராமப் படலம் என்பன ஒரு தொகுதி. இப்படி மூன்று தொகுதிகளாகப் பிரித்தபின்னர் எஞ்சுவன நான்காவதாக உள்ள தொகுதியாகும். அதில் உள்ளவை சந்திர சயிலப் படலம். வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், நீர் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், குலமுறைகிளத்து படலம், கார்முகப் படலம், எழுச்சிப் படலம், உலாவியற் படலம் ஆகியன. இவ்வாறு பிரிப்பதற்கு ஒர் அடிப்படையான காரணமும் உண்டு. முதலாவதாகவுள்ள நான்கு படலங்களில் கம்பன் தனக்கே உரிய முறையில் ஒரு நாட்டை நிர்மாணிக்கின்றான். கோசலம் என்ற பெயரை அதற்கு இட்டாலும்கூட ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஏன், பின்னேயுள்ள 12ஆம் நூற்றாண்டை எடுத்துக்கொண்டாலும்கூட உலக இலக்கியங்களில் பிற காப்பியங்களில் எங்கும் காணப்பெறாத முறையில் ஒரு நாட்டை அமைத்துக் காட்டுகிறான். சங்கப் பாடல்களில் வரும் நில வருணனைகளில் இயற்கைக் காட்சிகளைமட்டும் வருணிக்காமல் அந்த நிலங்களில் வாழும் மனிதர்கள், உணவு வகைகள், வாழ்க்கை முறை, எண்ண ஓட்டம், மேற்கொண்ட தொழில் என்பனபற்றியும் விரிவாகப் பாடியுள்ளனர்.