பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் - 51 மேலும் ஒரு சிந்தனையோட்டம் இதில் கிடைக்கின்றது. வளர்ந்து, காளைப்பருவம் அடைந்த ஒருவன் தனக்கென்று சில எண்ணங்கள், நினைவுகள், குறிக்கோள்கள் முதலியவற்றை உடையவனாக இருப்பான். முதன்முதலாக இப்போது அந்நிய மனிதனோடு பழகுகிறான் இராகவன். விசுவாமித்திரன் முன்பின் பழக்கம் இல்லாதவன். அப்படிப்பட்ட ஒருவன் ஒன்றைச் சொன்னான் என்றால், சாதாரண மனிதர்கள்கூட அதை ஏற்றுக்கொள்வது கடினம். அப்படியிருக்க, அரச குமாரன் எப்படி ஏற்றுக்கொண்டான் என்று சிந்திக்கத் தோன்றுகிறது அல்லவா? அதிலும் ஓர் அடிப்படை இருக்கின்றது. கீதையில் சொன்னபடி சம திருஷ்டி உடையவனாக, ஸ்திதப்பிரக்ஞனாக ஒருவன் வாழ்வானே யானால் அவன் தான், தனது, தன்னுடைய எண்ணம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எது கடமை என்று சொல்லப்படுகிறதோ அதை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பான். அந்தக் கடமையை நிறைவேற்றும்போது தன்னுடைய விருப்பு வெறுப்புகள் குறுக்கிட அவன் இடம் கொடுப்பதே இல்லை. இராமன் தனது கருத்து எதுவாயினும் உலகங்களை யெல்லாம் சிருஷ்டித்தவனும், காயத்ரீ மந்திரத்தைத் தோற்றுவித்தவனும், யாவராலும் போற்றப்படுகின்றவனும், பிரும்மரிஷி என்று பட்டம் பெற்றவனுமாகிய விசுவாமித்திரன் இதுதான் அறம்' என்று சொல்வானேயானால், இதுவரையில் அறம் என்பதற்குத் தான் கொண்டிருந்த கருத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, விசுவாமித்திரன் இவளைக் கொல்வதுதான் அறம்' என்று சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்கிறான் என்று காணுகின்றோம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது இராமனுடைய வளர்ச்சியையும் நாம் அறியமுடிகிறது; உண்மையில் சமதிருஷ்டி உடையவனாக அவன் வளருகிறான் என்பதைக் காணமுடிகிறது. இப்படிச் சமதிருஷ்டி உடையவனாக வளருகின்ற இந்த வளர்ச்சி பிற்காலத்தில் அவனுக்கு உதவப் போகிறது என்பதையும் காணுகிறோம்.