பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிச் சக்கரவர்த்தி கம்பனுடைய மகாகாவியமான இராமாயணத்தைப் பற்றி எத்தனையோ அறிஞர்களும், பேரறிஞர்களும், கற்றறிவாளர்களும், பண்டிதர்களும், புலவர்களும் பல ஆய்வுகளையும் செய்துள்ளார்கள். பல விளக்க உரைகள் எழுதியுள்ளார்கள். அவை தமிழிலும் வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ளன.

கம்பனுடைய இராமாயண மகாகாவியத்தின் கதை அமைப்பு, காவியச் சிறப்பு, கவிதை நயம், கருத்தாழம், பொருள் நயம், பாத்திரப் படைப்பு, அவைகளின் சிறப்புகள், கம்பனுடன், வால்மீகி மற்றும் இதர மகாகவிகளைப் பற்றிய ஒப்பீடுகள் முதலியன பற்றி எல்லாம் பல ஆய்வுகளும், மதிப்புரைகளும் எழுதப் பட்டும், விவாதிக்கப்பட்டுமிருக்கின்றன.

கம்பனைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் பல கருத்தரங்குகள் கவியரங்குகள், சொற்பொழிவுகள், உபன்னியாசங்கள், பாராயணங்கள், பிரவசனங்கள், பட்டி மண்டபங்கள், எதிர்மறை ஆய்வுகள் முதலிய பலவும் நடை பெற்றிருக்கின்றன.

கம்பனும், கம்பனுடைய மகா காவியமும் நாளுக்கு நாள் அதிகமான அளவில் மக்களிடையில், கற்றோரிடமும் மற்றோரிடமும் பிரபலமடைந்து வருகிறது. இன்னும் விரிவாக, அதிகமாகக் கம்பனுடைய கருத்துக்களும், காவியப் பெருமையும், தமிழின் பெருமையுடன் இணைந்து பாரதப் பண்பாட்டின் பொது வழியில் மக்களிடம் பரவ வேண்டும்.

மேலை நாடுகளில், அந்நாடுகளின் பெரும் கவிஞர்களுக்கும், புலவர்களுக்கும் பெரும் விழாக்கள் நடத்திப் பிரபலமாகக் கொண்டாடுகிறார்கள். நமது நாட்டிலும் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள், பாரதி, பாரதிதாசன் முதலிய பல பெருங் கவிஞர்களுக்கும் மன்றங்கள் அமைத்தும், விழாக்கள் எடுத்தும்

{{{pagenum}}}