பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. கம்பனின் குறிக்கோள்


மானுடம் உயர்ந்தது

கம்பன் என்றொரு மானிடன் பிறந்த பெருமைக்குரியது தமிழ்நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றான் பாரதி. ஆம்! கம்பன் மானுடத்தைப் பாடிய கவிஞன்! ‘மானுடம் வென்றதம்மா!’ என்று பாடுகின்றான்! கடவுள்கள் வெற்றி பெறுவது அதிசயமன்று. அரசர்கள் வெற்றி பெறுவது அதிசயமல்ல. மனிதன் வெற்றி பெற வேண்டும். இது கம்பனின் குறிக்கோள்! கம்பன் தனது பாத்திரங்களைச் சராசரி மனித உணர்வுகளுடைய பாத்திரங்களாகப் படைத்துள்ளான். போர்க்களத்தில் மாயாஜாலங்கள் பேசப்பட்டாலும் மானுடமே உயர்ந்து விளங்குகின்றது.

மதப் பிணக்குக் கூடாது

கோசல நாட்டிலிருந்து இலங்கை வரையில் இராமன் நடக்கின்றான். எத்தனை எத்தனை வகையான இயற்கைக் காட்சிகள்! அவன் சந்தித்த மனிதர்கள். விலங்குகள், எண்ணற்றவை காவியத்தைப் படித்து முடித்த பிறகு நமக்கு ஏற்படும் உணர்வு கம்பன் ஒரு கவிச்சரவர்த்தி என்பதுதான்! கம்பன் தனது கொள்கை, கோட்பாடுகளைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூற, இராமகாதையைக் கருவியாகக் கொண்டான் என்பதே உண்மை. தமிழக வரலாறு கம்பனை