பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்101


மிகுதியும் பாதித்திருக்கிறது. தமிழ்நாடு சைவ, வைணவச் சண்டைகளில் ஈடுபட்டு வலிமை இழந்ததை உணர்ந்த கம்பன் சமய ஒருமை நலம் கருதி,


“உலகம் யாவையும் தாம் உள வாக்கலும்
நிலைபெறுத்தலும்; நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்–அவர் தலைவர்;
அன்னவர்க்கே சரண் நாங்களே!”

(பாயிரம்-1)

என்று பொதுமையாகக் கடவுள் வாழ்த்துப் பாடுகின்றான்.


“அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன்"
என்று உரைக்கும் அறிவி லோர்க்குப்
பரகதி சென்று அடைவரிய பரிசேபோல்”

(கம்பன் - 4470)

என்று பேசுவான்.

நன்றியறிதல்

தமிழ் மக்கள் பல்வேறு பண்புகளில் சிறந்திருந்தாலும் நன்றி பாராட்டும் நற்பண்பில் மேலும் வளரவேண்டும் என்பது கம்பனின் விருப்பம். அந்த உணர்வின் தூண்டுதலிலேயே கும்பகருணப் பாத்திரத்தைப் படைக்கின்றான். இராமகாதையில் மிக உயர்ந்து விளங்கும் பாத்திரங்களில் கும்பகருணன் ஒருவன். அறநெறியின் பெயரால், உறவை, உடன்பிறப்பை, பரிவை, பாசத்தைத் துறத்தல் கம்பனுக்கு முழு உடன்பாடன்று. காவியம் முழுதும் மனிதம் மேம்பட்டு நிற்கின்றது. ஏன்? கம்பன் தன் புரவலராக விளங்கிய திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் பெயரை இடம் தேர்ந்து அமைத்து நன்றி பாராட்டுகின்றான். இராமனுக்கு முடி சூட்டும்போது சடையப்ப வள்ளல் மரபினர்