பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்



ஏழையாக இருப்பது பாவமன்று! ஏழ்மையைத் துன்பமாக, துயரமாக வளர்த்துக் கொள்வது தீது, ஏழ்மையின் காரணத்தை அறிந்து கொண்டு அறிவார்ந்த நிலையில் மாற்ற முயற்சி செய்தால் ஏழ்மை மாறும்! முயன்றால் ஏழைகளால் எதையும் செய்ய இயலும். ஏழைகளால் செய்ய இயலாதது என்ற ஒன்று இல்லை. பாரதி,


“கஞ்சி குடிப்பதற் கில்லார்–அதன்
காரணங்கள் இவை யெனும் அறிவு மில்லார்”

என்று கூறியதுபோல், இன்றைய ஏழைகள் கஞ்சியில்லாமல் இருப்பதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொள்ளாதது மட்டுமன்று, தங்கள் ஏழ்மைக்குக் கடவுளும் விதியும் காரணம் என்று பிழை படக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. அண்ணல் இராமபிரான், இலக்குவன் அமைத்த பர்ணசாலையைக் கண்டு வியந்தபோது,


“தா இல் எம்பிகை சாலை சமைத்தன
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே.”

(கம்பன்-2095)

என்று கூறுவதை உணர்க!

நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இந்தத் துணிவு வரவேண்டும். வரவழைக்கப் படவேண்டும். அன்றே நமது நாடு வளரும். இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதனும் தற்சார்புடைய பொருளாதார வசதி பெறுதல் வேண்டும். சார்ந்து வாழ்தல் தீது, சுரண்டும் பொருளாதாரச் சமுதாயம் அறவே கூடாது. நாடும் நாடா வளத்தனவாக வளர வேண்டும். அந்நிய மூலதனத்தின் சந்தை நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு இல்லை. அந்நிய மூலதனம் ஊளைச் சதை போலத்தான்!