பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்105


ஆதலால், கம்பனின் கருத்துப்படி ஏழ்மை அழிவுக்குரியதல்ல; ஆக்கந்தரும் உந்து சக்தி என்பதை ஓர்க!

தொண்டலால் ஊதியமில்லை!

மனிதகுல வரலாறு இடையறாது வளரத் துணையாய் அமைவது தொண்டு. பேசுதல் எழுதுதல் ஆகியவற்றைவிடத் தொண்டு செய்தலே உயர்ந்தது. இதனைக் 'கைத்திருத் தொண்டு' என்பார் சேக்கிழார். சிவமும், கைத்திருத்தொண்டு செய்த அப்பரடிகளுக்கு வாசியில்லாத காசு தந்தருளிய பான்மையை உணர்க! அப்பரடிகள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றும் தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை என்றும் அருளிச் செய்ததையும் உணர்க.

கம்பன், இராமன் வாயிலாகத் தொண்டு பற்றிக் கூறும் கருத்து, பலகாலும் படித்துணரத் தக்கது. செல்வத்திற்கு வரம்பு உண்டு. எண்ணியபடி செல்வம் வருவதில்லை. வந்தாலும் நிற்பதில்லை. தொண்டுக்கு வரம்பில்லை. தொண்டு செய்யச் செய்ய மேலும் மேலும் விருப்பம் தூண்டப்பெறும். ஆர்வம் வளரும். இந்த உலகத்தில் உடலுக்குத் தரப்பெறும் உணவு, தற்காலிகமாகப் பசியைத் தணிக்கும். ஆனால், மீண்டும் பசிக்கும் உணவுக்குப் பயன்படுவது கூலி. ஊதியம்! உண்ட உணவு அன்றாடம் கழிப்பறைகளைத் தூர்க்கும் வாழ்க்கை, முடிவில் இடுகாட்டில் கிடக்கும். ஆனால், தொண்டும் தொண்டின் பயனும் உயிர்க்கு ஊதியமாவனவாம். ஊதியம் உயிர்க்கு ஊதியம். கம்பனின் பாடல் இதோ:


பின்னும் தம்பியை நோக்கி, பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு; இதற்கு
என்ன கேடுண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு ‘மேல் வரும் ஊதியத் தோடு’ என்றான்.

(கம்பன்-2100)