பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்109


கூறுகின்றான். இராமனுக்குப் போர் இலட்சியமன்று. சீதையை மீட்பதுதான் இலட்சியம்! சீதையை இராவணன் விடுதலை செய்திருந்தால் இராவணன், சீதையை நினைத்ததும், எடுத்ததுமாகிய குற்றத்தை இராமன் மன்னித்திருப்பான் என்று மாலியவான் கூறுகின்றான். ஆனால், இராவணன் மறுத்துவிட்டான்.

தமிழில் வழங்கும் ஒப்பற்ற காவியங்களாகிய இராமகாதை பெண்ணின் காரணமாகவும், பாரதம் நிலத்தின் காரணமாகவும், கந்தபுராணம் ஆதிக்கத்தின் காரணமாகவும் நடந்த போர்களைக் கூறுகின்றன. இராம—இராவணப் போரில் இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்! பாரதப் போரில் துரியோதனாதியர் அழிந்து போயினர். கந்த புராணத்தில் சூரபதுமன் திருத்தப்பட்டு வாழ்விக்கப் படுகின்றான்.

அழித்தல் அறமன்று, திருத்தப்படுதலும் வாழ்விக்கப்படுதலுமே அறம். தமிழ் மரபு, ‘ஆழ்க தீயதெல்லாம்’ என்பது தான். இந்தக் கந்தபுராண மரபு பின்பற்றப் பட்டால் போர் ஒடுங்கும்; புவி வளரும். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு போர் வராமைக்குக் காரணம் அச்சமேயாம்—அறிநெற சார்ந்த எண்ணத்தினால் அன்று. வீட்டையும் நாட்டையும் அமைதியில் நடத்துக!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

என்பதும்,

“காக்கை குருவி எங்கள் சாதி–நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

என்பதும் நமது மந்திரங்களாகட்டும்; வாழ்க்கை நெறியாகட்டும்! வளர்க! வாழ்க!