பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


இந்தியா இன்று சுதந்திர நாடு. இந்தியாவில் நடைபெறுவது சுதந்திரக் குடியரசு; மக்களாட்சி. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களுக்கு அரசியல் அறிவு வேண்டும்; அரசியல் ஞானம் வேண்டும்; பொருளாதார அறிவு வேண்டும்; சமூக விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையுடன் கூடி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களாட்சி முறை வெற்றிக்கு மக்கள்தான் பொறுப்பு. ஆதலால், நமது நாட்டு இலக்கியங்கள் அரசியலை மையமாகக் கொண்டு ஊடும் பாவுமாகத் தோன்றின. நமது நாட்டு மக்களிடையில் அரசியல், சமூக, பொருளாதார, அறிவு வளரவேண்டும் என்று அடிப்படையில் கம்பனின் அரசுகள் என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப்பெற்றது. ஆயினும் அரசியல், சமுதாயம், பொருளியல் ஆகிய இன்றையச் செய்திகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெற்றுள்ளன.

இன்று நமது நாட்டில் வசதியும் வாய்ப்புமுடையோர் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. அது மட்டுமல்ல; அரசியலை அலட்சியப்படுத்துகின்றனர். அவர்கள் ஆட்சியினர்க்குக் கப்பம் கட்டிக் காரியங்களை முடித்துக் கொள்ள எண்ணுகின்றனரேயன்றி அரசியலில் ஈடுபடுவதில்லை. இவர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பது கூட இல்லை. நடுத்தர வர்க்கத்தினர் நுகர்வுச் சந்தையை விரிவாக்கியதன் மூலம் சுக வாழ்வில் நாட்டம் செலுத்துகின்றனர். அறிஞர்கள் நிலை, அரசியலைப் பொறுத்த வரையில், அஞ்ஞாத வாசமே! சிந்தித்தும் பலர் வாக்களிப்பதில்லை. இந்த நிலையில் இந்தியா சிறந்த அரசியலை ஆட்சியியலைப் படிப்படியாக இழந்து வருவதை உணர முடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பாதுகாப்பின்மை, உத்தரவாதமின்மை ஆகியவற்றால் தனி மனிதனுடைய