பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


பெருகின. இவ்வளவு தீமைகளும் மனிதனின் ஒழுங்கு, ஒழுக்கம் கெட்டுப் போனமையால் விளைந்த விளைவுகள். இதற்கு மூல காரணம் தனிச் சொத்துடைமை தோன்றியதோடு, காவல் என்ற பெயரில் வேலிகள் இடப் பெற்றதாகும். வீடுகளுக்கிடையே சுவர்கள் தோன்றின. பின் சொத்துடையவர்கள் எல்லாரும் கூடித் தங்களுடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள, புயபலமுள்ள தலைவனைத் தேர்வு செய்தனர். இங்ஙனம் தலைவனிடம் தொடங்கிய அரசியல், ஏகாதிபத்யமாக இன்று உருக்கொண்டு பூதாகாரமாக வளர்ந்துள்ளது. இங்ஙனம் வளர்ந்த ஆட்சிமுறை, முடியாட்சி என்றும் குடியாட்சி என்றும் இருவகையாகப் பிரிந்தன. நமது நாடு மக்களாட்சி முறை தழுவிய நாடு.

கம்பனின் இராமகாதை

கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய ‘சான்றோர் கவிதை’க்கு ஓர் எடுத்துக்காட்டு. மனிதரில் சிறந்தோர் சான்றோர். சான்றோர் யார் மாட்டும் எவ்வுயிர் மாட்டும் சம பார்வையுடையவர்கள். கம்பனின் இராமகாதையில் அவனுடைய பொருள்நோக்கு எளிதில் விளங்குகின்றது. என்றுமுள இனிய தமிழில் இராமகாதையைப் பாடி இசைகொண்டு புகழ்மிக்க கவிச்சக்கரவர்த்தியாகக் கம்பன் விளங்குகின்றான். கம்பனின் இராமகாதையில் ஏற்றம் பெற்றோர் உண்டு. ஆனால், முற்றாக இகழப்பட்டோர் யாரும் இல்லை என்று துணிந்து கூறலாம். அந்தப் பாத்திரங்களை நடுவுநிலையுடன் குறைகளையும் நிறைகளையும் மதிப்பீடு செய்து, தமது காவியத்தில் இடம் பெறச் செய்துள்ள அருமை உணரத்தக்கது. ஆதலால், சான்றோர் கவிதைக்குக் கம்பனின் இராமகாதையே எடுத்துக்காட்டு.