பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


அறியாமல் செய்யும் தவறுகள் கம்பனின் இராம காதையில் மன்னிக்கப்படுகின்றன. கம்பனின் காலம் நிலப்பிரபுத்துவ காலம். ஆனாலும் “உடையாரும் இல்லை; இல்லாரும் இல்லை” என்று பொதுமை நலச் சமுதாயம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கம்பனின் இராமகாதையில் ஐந்து நாடுகளின் அரசுகள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றுள் இரண்டு பேரரசுகள், மூன்று சிற்றரசுகள். பேரரசுகளில் ஒன்று அயோத்தி. மற்றொன்று இலங்கை, சிற்றரசுகளில் மிதிலை அரசு ஒன்று; கங்கைக்கரை அரசு ஒன்று; கிட்கிந்தை அரசு ஒன்று. இந்த ஐந்து அரசுகளில் கிட்கிந்தை அரசைத் தவிர, மற்ற நாட்டு அரசுகளில் குழப்பங்கள் இல்லை. மிதிலை (ஜனகர்) அரசு கதைப் போக்கிற்காக அமைந்த அரசு, விரிவான செய்திகள் கிடைக்கவில்லை.

அரசுகளின் நிலை

மனித சமுதாயத்தில் அரசுகளின் தோற்றமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதல்ல. நல்லதைக் கருவாகத் தாங்கி அரசுகள் தோன்றவில்லை. நிலப் பிரபுத்துவமும் — தனி உடைமையும், உழைப்பும்—கூலியும் என்ற சமுதாய நெறிமுறை தோன்றிய பிறகு, உடைமைக்காரர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக அரசைத் தோற்றுவித்து, அதிகாரங்களை வழங்கினர். அரசுகள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை - மக்களாட்சியிலும் கூட - அரசுகள் உடைமை வர்க்கத்தைப் பாதுகாப்பதாகவே இயங்கி வருகின்றன. பின், காலப்போக்கில் அரசே ஓர் அசுர அமைப்பாகிவிட்டது. அரசுக்கு நிலம்; கஜானா; படை என்றெல்லாம் அமைந்துவிட்டன. ஏன்? அரசுகளே ஒரு காரணமும் இல்லாமல் மக்கள் விரோத அமைப்பாக மாறின; இயங்கின; இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் பெரும்பான்மையான அரசுகள் கொடுங்கோல் அரசுகளாக விளங்கின. உலக வரலாற்றின் ஏடுகளில்