பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


இடத்திற்கு ஏற்ப மாறிமாறி ஒழுகுபவர்களைக் குறிக்கும் என்பான்.

“ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம்புனல்
பேர்ந்து, ஒளிர் நவமணி படர்ந்த பித்திகை
சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்,
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது”

(கம்பன்-3710)

என்பது கம்பன் பாடல். ஆதலால் சேரிடம் அறிந்து சேர வேண்டும்.

மனிதப் பண்பு நலனைப் பற்றிப் பேசுபவர்கள் ‘மனத் தூய்மையை’ குறித்து நிறையக் கூறுவர். மனத்தில் தூய்மையின்மை இயற்கையா, செயற்கையா? ஆய்வு தேவை. மனம் இயல்பாகத் தூய்மையானதுதான். மனத்துக்குத் தூய்மையின்மை எங்கிருந்து வந்தது? அல்லது தூய்மை எங்கிருந்து வருகிறது? வாழ்நாளில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் நட்பாக, உறவாகக் கிடைக்கும் மனிதர்கள்தாம் ஒருவனுடைய மனத்தூய்மைக்கும் கேட்டிற்கும் காரணம்.

‘மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு’

(திருக்குறள்-454)

என்றது திருக்குறள். கம்பனும் ‘குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்’ என்றான்.

கோசல நாட்டு மக்கள் நூற்றுக்கு நூறு கல்வி கற்றவர்கள். கோசல நாட்டில் கல்வி கற்காதவர்கள் இல்லை. இன்று நம்முடைய நாட்டில் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை 36.2% இவ்வளவுதான்! கல்லாதாரைக் கற்பிக்கும் நோக்கத்துடன் அறிவொளி இயக்கம் நடத்தப்படுகிறது. காலம்தான் விடை சொல்ல வேண்டும்.