பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்55


நமது நாடு விடுதலை பெற்று நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகியும் குடியாட்சியாக இருந்தும் நமது நாட்டின் அரசியலில் மக்கள் பங்கேற்கவில்லை. நமது நாட்டு மக்கள் வாக்களிப்பது என்று ஒரே ஒரு அரசியல் கடமையை மட்டுமே நிறைவேற்றுகின்றனர். இந்தக் கடமையைக் கூடச் சிலர் செய்வதில்லை, வாக்களிப்பதும் கூட இல்லை. வாக்குகள் வேட்பாளரால் வாங்கப்படுகின்றன. நமது நாட்டு அரசியலில் வர வர பணத்தின் ஆதிக்கமும் வன்முறைகளும் வளர்கின்றன. காலப் போக்கில் இந்த நிலைமை நீடித்தால், இலங்கை அரசைப் போன்ற அரசு உருவாகும். இஃது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்காது என்பதை உணர்ந்து நாம் குடிமக்களுக்குரிய கடமையாற்ற வேண்டும்.

தனி உடைமைச் சமுதாய அமைப்பு தோன்றிய வழி, சமுதாய அமைப்பு உருவம் பெறத் தொடங்கியது. ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமைய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதன் விளைவாகச் சமுதாய அமைப்பு உருக்கொண்டது. ஆயினும் உள்ளார்ந்த நட்பு— உறவு உணர்வுடன் உருக்கொள்ளவில்லை. பொருளின் ஆதிக்கமே மேலோங்கியது. சமுதாய அமைப்பு உருக்கொள்ளவில்லை. வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையே சுவர்கள் தோன்றின. குடும்ப அமைப்புக்கள் கூடச் சிதைந்தன. ஒரு குடியில் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையிலும் கூடச் சண்டைகள் தோன்றின. இந்தத் தாக்கத்தை இராமகாதை தெளிவாகக் காட்டுகிறது.

சகோதரத்துவம்

அயோத்தியிலிருந்த அமைப்பின் வழி உடன்பிறந்தார்களிடையில் சண்டை இல்லை. எனினும் இயற்கை அமைப்பு தனது வீச்சைக் காட்டுகிறது. பரதன் அதற்கு விதிவிலக்கு.