பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்59

பொதுவுடைமைச் சமுதாயம் அமைப்பதற்கு முன்னோடியாக அமையக் கூடிய சோஷலிச சமுதாய அமைப்பே— சமவாய்ப்புச் சமுதாயமே இன்னும் உலக அரங்கில் கால் கொள்ளவில்லை. ‘சம வாய்ப்புச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு. உழைப்புக்கேற்ற ஊதியம். பொதுவுடைமைச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு. தேவைக்கேற்ற ஊதியம்’ என்பது கோட்பாடு. இன்னமும் மக்கட் சமுதாயத்தில் பலர் உழைக்க விரும்புவதில்லை; ஆனால் அனுபவிக்க விரும்புகின்றனர்; துய்க்க விரும்புகின்றனர். இத்தகையோர் வாழும் இந்தச் சமுதாயத்தில் எங்ஙனம் சோஷலிசம் உருவாகும்? பொதுவுடைமைச் சமுதாயம் அமைய இயலும்? என்றைக்கு மனிதர்கள் விருப்பார்வத்துடன், ஆவேசத்துடன் உழைப்பதை உயிரின் இயல்பாக (ஜீவசுபாவமாக) ஏற்றுக் கொள்கின்றார்களோ அன்றுதான் சோஷலிச சமுதாயம் மலரும்; பொதுவுடைமைச் சமுதாயம் தோன்றும்.

ஆதலால், கம்பன் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் ஓர் இலட்சிய உலகம் பற்றி எண்ணி இருந்தான் என்பதை உணர முடிகிறது. அந்த இலட்சியம் அவன் படைத்த கோசல நாட்டில் கூட நடைமுறையில் இல்லை. உறுதியான, பண்பார்ந்த சிந்தனையுடன் இராமனுக்கே முடிசூட்ட வேண்டும், பரதனுக்கன்று என்று கூனியுடன் வாதாடிய கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது எப்படி? கூனி என்ன மந்திர வித்தையா செய்தாள்? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கோசல நாட்டின் பொருளாதார குவியல் முறையில் இருந்தது. எல்லோருக்கும் செல்வம் கிடைக்கவில்லை. ஏன்? கைகேயிக்கே கிடைக்காது. கைகேயியின் மகன் பரதனுக்கும் ஒன்றும் கிடைக்காது. எல்லா உரிமையும் இராமனின் தாய் கோசலைக்கே உண்டு. கோசலை விரும்பிக் கொடுப்பதைத்தான் பெற்று வாழவேண்டும் என்ற