பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


போகாமலும் பாதுகாக்கப்படுகிறது. அதுபோலத்தான் முயற்சியின் விளைவாக, பயனாகத் துன்பங்களையும் துயர்களையும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உழைப்பவர்கள் மாமனிதர்களாகிறார்கள்; சாதனை செய்தவர்களாகிறார்கள். வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். முயற்சியில் ஈடுபடாதவர்கள் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகிச் சாகின்றனர். வாழ்க்கை என்பது போராட்டம்! இந்த போராட்டத்தில் அக்கறையும் முயற்சியும் உடையவன் வீழ்ந்துவிட்டாலும் தரையில் மோதிய பந்துபோல் மீண்டும் எழுந்துவிடுவான். முயற்சியில்லாதவன் கோழை. வீழ்ச்சியடைந்தால் மண் உருண்டை போல உடைந்து மண்ணோடு மண்ணாகி விடுவான்.

தவத்தின் சின்னம்

தவத்தின் சின்னமாக விளங்குபவன் இராமன். ஆம்! முடியைத் துறந்தபோதும் அப்பொழுதலர்ந்த செந்தாமரை போன்றிருந்தான். ‘என் பின்னவன் பெற்ற பெருஞ் செல்வம் அடியேன் பெற்றதன்றோ’ என்றும், ‘மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ?’ என்றும் கூறி உவகையுடன் காட்டிற்குள் புகுந்தானே! இது தவம் அல்லவா?

முயற்சியின் சின்னம்

முயற்சியின் சின்னம் சுக்கிரீவன். ஆம்! இழந்ததைத் தொடர்ந்து முயன்று பெற்றவன் அவன். ஆதலால், சுக்கிரீவனை கம்பன் முயற்சியின் திருவுருவமாகப் பாராட்டுகின்றான். வாழ்க்கையை வலிமையுடையதாக்கிக் கொள்ள, தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, நாளும் நல்லன பல செய்ய, முயற்சி தேவை. முயற்சியே மனிதனை முழுமைப்படுத்துகிறது; வளர்க்கிறது; வாழ்விக்கிறது.