பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்67

இல்லாதவன் விலங்குமல்லன், ஏன்? விலங்குகளுக்குள்ள ஐந்தறிவு இந்த மனிதனுக்கு வேலை செய்யாது. அவன் உணர்ச்சியற்ற தூண், வீண் ஆடம்பரம் செய்பவன் வான்கோழி, அநீதியைத் தட்டிக் கேட்காமல் இருப்பவன் கழுதை, அறிவை வளர்த்துக் கொள்ளாமல் படித்த சாஸ்திரங்களைப் படித்துப் படித்து ஒப்புவிப்பவன் கிளிப்பிள்ளை. அடிக்கடி கோபம் கொள்கிறவன் வேட்டைநாய். சுயநிர்ணயம் இல்லாமல் பிறரை நச்சி வாழ்பவன் நாயாவான். அற்ப சுகத்தில் நாட்டமுள்ளவன் பன்றி. நல்லது என்று பெயர் வாங்கித் தீமை செய்பவன் பாம்பு. ஊக்கமில்லாமல் இருப்பவன் தேவாங்கு. இங்ஙனம் பலபடக் கூறினாலும் மானுட இயல்பில் ஆக்கிரமிப்புக் குணம்— போர்க் குணம் இருப்பதைக் குறிப்பிடவில்லை.

போருக்குக் காரணம்

மனிதன் அழுக்காறு, அவா, வெகுளி, ஆகியவற்றால் ஆட்டிப் படைக்கப்படும் பலவீனமுடையவன். அவன் மற்றவர்களுடன் ஒத்துப் போகமாட்டான். ஆனால் மற்றவர்கள் —உலகமே அவனுடன் ஒத்துழைத்துப் போக வேண்டும் என்று விரும்புவான். ஒவ்வொரு மனிதனும் உலகத்திற்குச் சமமானவன். ஒருவன் தானே என்று அலட்சியப்படுத்துவதற்குரியவன் அல்லன். இந்த மனித உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன என்பதைச் சற்றும் உன்னான்; ஓரான். ஆனால், இந்த உலகம் அவனுக்குக் கடமைப்பட்டிருப்பதாக எண்ணிக் கொள்வான். அதனாலேயே இந்த உலகம் கெட்ட போரிடும் உலகமாக மாறியது.

மனிதனுக்கு வெறிபிடித்துவிட்டால் அவன் பேய், பிசாசு போல ஆகிவிடுகிறான். முன்னேற்றத்துக்கான சாதனங்களைக் கொண்டே மனிதகுலத்திற்குத் தீமை செய்கிறான். மனித குலத்தை நாசம் செய்கிறான். மனிதகுலம் வளர்ச்சி,