பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்73

சோவியத் மீது படையெடுத்தபோது, சோவியத் நாட்டு மக்கள் தியாகத்துடனும் தீரத்துடனும் போராடி, இட்லரின் நாசிசப் படையைத் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றனர். இங்ஙனம் நடந்த போர்கள் பலப்பல. உலக வரலாற்றின் பக்கங்களில் தாமஸ் ஆல்வா எடிசன், சேக்ஸ்பியர், திருவள்ளுவர், ஏசு, நபிகள் முதலியோருக்குக் கிடைத்த பக்கங்கள் சிலவே! ஆனால் கெட்ட போரிட்டவர்களுக்கும் போர்களினால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் கிடைத்த பக்கங்கள் பலப்பல.

இந்தியா ஒரு துணைக்கண்டம். இந்தியாவில் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான அரசுகள் இருந்தன. இவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து கொண்டேயிருந்தன. தமிழ்நாட்டு வரலாற்றிலும் அப்படித்தான்! நாடு சிறியது; ஆனால் போர்கள் அதிகம்! பல அரசர்கள் இந்தியாவை ஒரு குடையின் கீழ்க் கொண்டுவர முயற்சி செய்தனர். சந்திர குப்த மெளரியன் ஒரு பேரரசன். இவனுடைய அரசியல் குரு சாணக்கியர். இவரியற்றிய அரசியல் சாத்திரம் அர்த்த சாத்திரம். இந்த நூலில் முரண்பட்ட செய்திகள் பல உண்டு. ஆயினும் நல்ல நூல். அடுத்து அசோகர், இவர் இந்தியாவில் பேரரசை நிறுவியவர். சிறந்த வீரர். தொடக்க காலத்தில் போர்க்களங்கள் பல கண்டு வெற்றி பெற்றவர். ஆயினும் பிற்காலத்தில் போரை வெறுத்தார். சமாதானக் காவலராக விளங்கினார். தமிழ் நாட்டில் மாமன்னன் இராஜராஜன், இராஜேந்திர சோழன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், கரிகாற்சோழன் முதலிய பேரரசர்கள் போர்க்களங்களில் வாகை சூடியவர்கள்.

பண்டைய போர்களும் இன்றைய போர்களும்

இங்ஙனம் உலக வரலாறு, போர்களாலேயே நடத்தப் பெற்றது. இடையிடையே மனிதகுல முன்னேற்றத்திற்குரிய