பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


பணிகள், கலைப் பணிகள் நடந்தன. மிகத் தொன்மைக்காலத்தில் நடந்த போர்கள் அறநெறி சார்ந்த போர்கள். பின் விஞ்ஞான யுகத்தில் நடந்த போர்கள் அழிவுப் போர்கள். அறநெறிச் சார்பே இல்லாத போர்கள். ஏன்? பழங்காலத்தில் போராடிய வீரர்களுக்கு இருந்த வீரத்தில் குறைந்த சதமானம் கூட இக்காலத்தினருக்கு இல்லை. ஔிந்திருந்தும், மறைந்திருந்தும், இரவிலும், நடத்தும் போர் இன்றைய போர் ஏவுகணைப் போரில் ஏவுகணையைச் செலுத்துபவர் பத்திரமான — பாதுகாப்பான அறைக்குள் தங்கிக் கொள்கிறார். இந்தப் போர்களை வீரப்போர் என்று கூற இயலாது. இந்தப் போர்களில் பெறும் வெற்றிகளை வெற்றியென்றும் பாராட்ட இயலாது.

தமிழ் நாட்டில் நடந்த போர்கள் வீரப் போர்கள். எதிரியிடம் ஆயுதம் இல்லையென்றால் போர் நடத்தமாட்டான்; எதிரிகளின் முதுகில் குத்தமாட்டான். ஒரு குறிப்பிட்ட இடத்தில், களத்தில் பொருதுவான்; பொருது மேற்செல்வான். இரவில் போர் இல்லை. இவையெல்லாம் பண்டையக் காலப்போரில் நிலவிய அறநெறி. இன்று போர்க்களத்தில் அறநெறி இல்லை. பண்டையப் போர் முறையில் பொருள்களுக்கு, சொத்துக்களுக்கு இழப்பு ஏற்படுவது இல்லை. இக்காலப் போர்களில் அளவற்ற இழப்பு ஏற்படுகிறது. பண்டு போர் என்றால் பொதுமக்களுக்குத் துன்பம் இல்லை, மரணம் இல்லை. இன்றோ பொது மக்கள்தான் போரில் சாகிறார்கள். ஏராளமான சொத்துக்கள் அழிகின்றன. மனித குலத்திற்குப் போரற்ற உலகம் தேவை. அது எப்போது கிடைக்கும்? அமைதிக்கும் சமாதானத்திற்கும் போராட வேண்டிய மதங்கள் கூட வேறுபட்ட நிலையில் உள்ளன. எந்த நாட்டில் உள்ள மத நிறுவனங்களும் போர் ஓய்வுக்கும் அமைதிக்கும் பிரார்த்தனை செய்வதில்லை. அந்தந்த நாட்டிற்கு வெற்றி வேண்டியும், எதிரி நாடுகள்