பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்83


சொன்னான்!” இராவணனின் பாட்டி தாடகையை வெட்டி வீழ்த்திப் பருந்துக்கு இரையாக்கிய காலத்தில் இராவணன் எங்கே போனான்? இராவணன் மாமன் சுபாகு என்பவன் போராடி அழிந்த காலத்திலும், எங்கிருந்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான். ஏன்? இராவணன் தங்கை சூர்ப்பனகை இலக்குவனால் மூக்கறுபட்டு மானபங்கப் படுத்தப்பட்ட போதும் இராவணன் போருக்கு வரவில்லையே! ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்பதற்கு இலக்கியம் இராவணன், ‘இராவணனுக்கு ஆண்மையே இல்லை’ என்று இராமன் இராணனைப் பழித்துரைத்ததையும் அங்கதன் எடுத்துக் கூறினான். தூது பயன் தராததால் அங்கதன் இராமனை வந்தடைந்தான். இராமனிடம் தூதின் முடிவை மிகவும் சுருக்கமாக,

“முற்றஒதி என்? மூர்க்கன், முடித்தலை
அற்றபோது அன்றி ஆசை அறான்”.

(கம்பன்-7016)

என்று கூறினான். ‘சமாதானம் இல்லை; சீதையின்பால் உள்ள ஆசையை அவன் முடியிழக்கும் வரையில் விடமாட்டான். இராவணனின் முடி வீழ்தலுக்குரிய போர் தேவை. இதுவே என் தூதின் முடிவு’ என்றான் அங்கதன்.

இராம–இராவணப் போர்

போர் மூண்டு விட்டது! இராவணன் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். இராவணன் செருகளம் வந்த செய்தி இராமனுக்குப் பூரிப்பைத் தருகிறது. அனுமனின் தோளில் இராமன் ஆரோகணித்துச் செருகளம் புகுந்தான்; வில்லை வளைத்து நாணேற்றினான்; அந்த நாணோசை ஊழிக் காலத்துப் பேரோசை போல் கேட்டது. இராவணன் போர்க்